பக்கம்:திரு. வி. க.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 அ.ச. ஞானசம்பந்தன்

முப்பால் என்றே பெயர் இருப்பினும் வள்ளுவப் பெருந்தகை நான்காவதாக உள்ள வீட்டையும் கூறினார் என்று நிலை நாட்டுவதற்குக் கடவுள் வாழ்த்து, துறவு, நிலையாமை, மெய்யுணர்வு’, “அவாவறுத்தல் முதலிய அதிகாரங்களை எடுத்துக்காட்டுவர். இப் பெருமக்களுடைய முயற்சியால் வள்ளுவப் பெருந்தகைமீது அவர்கள் கொண்டுள்ள அன்பு புலனாகிறது. திருவள்ளுவர் வீட்டுக்குத் தனிப்பால் வகுத்துக் கூறாமைக்குக் காரணம் என்ன என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு பெரியாரவர்கள் மிகச் சிறந்த முறையில் விடை காண்கிறார்:

“வீடு, வாக்கு மனங்கட்கு எட்டாதது, அத்தகைய ஒன்றை எவ் வாக்கல் விளம்புதல் கூடும்? இதுபற்றியே பரிமேலழகரும், .வீடென்பது சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத் தாகலின், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவதல்லது. இலக்கண வகையாற் கூறப்படாமையால், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்’ என்று ஒருவாறு விளக்கிப் போந்தனர்.

அறவழி நின்று, பொருளாக்கி, இன்பம் நுகர் வோர் வீடு அடைதல் ஒருதலை. அறம் பொருள் இன்ப வாழ்வின் பயன் வீடு. அடைவாகவும் பயனாகவு முள்ள ஒன்றை எப்படிச் சொல்லால் அறுதியிட்டுச் சொல்வது? வீடு, அறம் பொருள் இன்பங்களினின்றும் வேறுபட்டு நிற்பதன்று. அது மூன்றிலும் விராவி நிற்பது. திருக்குறளிலுள்ள ஒவ்வொரு பாலிலும் வீடு விராவியே நிற்கிறது.

வீடு, வீடு என்னும் அடியினின்றும் பிறந்தது. விடுதலை வீடு, கட்டினின்றும் விடுதலையடைவது வீடு. வீடு எங்கிருப்பது? அதற்கென ஒரு தனியிடம் உண்டோ? கட்டுடையார்க்கு அது புலனாகாமையால், அவர் அதற்கென ஒரு தனியிடம் வகுத்தனர் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/224&oldid=695521" இலிருந்து மீள்விக்கப்பட்டது