பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

கைகனளக் கட்டுவித்தார். பின்னரும் பல திருப்பணிகளைச் செய்து தில்லயம்பலவன் திருவடி நீழலை அடைந்தார் என்பது வரலாறு. இச்செய்தியினை வம்பு மலர்த் தில்லையீசனைச் சூழ மறைவுவளத்தான், நிம்பநறுந் தொங்கற் கோச்செங்கணான் (82} எனவரும் திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பிகளும்,

"திருவார்ந்த செம்பொன்னி னம்பலத்தே நடஞ்செய்யும்
பெருமாளை அடி வணங்கிப் பேரன்பு தலைசிறப்ப
உருகாநின் ராங்களிப்பத் தொழுதேத்தி யுறையுநாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார்"

(பெரிய-கோச்-10)

“தேவர்பிரான் திருத்தொண்டிற் கோச்செங்கட் செம்பியர்கோன்
பூவலயம் பொது நீக்கி ஆண்டருளிப் புவனியின் மேல்
ஏவியநற் றொண்டுபுரிந் திமையவர்க ளடிபோற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர் திருவடி நிழற்கீழ்"

(க்ஷ-17)

எனவரும் பெரிய புராணச் செய்யுட்களில் சேக்கிழார் நாயனாரும் விரித்துக் கூறியுள்ளமை காணலாம்.

கி.பி. 871 முதல் 907 வரை சோழநாட்டை ஆட்சி புரிந்த முதலாம் ஆதித்த சோழன், கொங்குமண்டலத்தை வென்று தில்லைச் சிற்றம்பல முகட்டினை அப்பொன்னினால் வேய்ந்தான் இச்செய்தி,

"சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம்பல முகடு
கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன்"

(திருத்தொண்டர் திருவந்தாதி-65)

எனவரும் நம்பியாண்டார் நம்பிகள் வாய் மொழியால் உறுதி செய்யப்படும்.

ஆதித்த சோழன் மகனாகிய முதற் பராந்தக சோழன் கி.பி. 907 முதல் 953 வரை சோழநாட்டை ஆட்சி பரிந்தான்.