பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

இவன் சிவபக்தியிற் சிறந்து விளங்கினான். தன் தந்தை ஆதித்தன் சிற்றம்பலத்தைப் பொன்னம்பலமாகச் செய்யத் தொடங்கிய திருப்பணியை மேலும் தொடர்ந்து செய்து இனிது நிறைவேற்றினான். இவ்வாறு இவ்வேந்தன் தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்னம்பலமாக்கிய செய்தி ஆனைமங்கலச் செப்பேடுகளிற் குறிக்கப் பெற்றுள்ளது. பராந்தகன் செய்த இத்தில்லைத் திருப் பணியினை,

“வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறற்
செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன்னணிந்து
அங்கோல் வளையார் பாடியாடும் அணிதில்லையம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம் இறையை என்று கொல் எய்துவதே,”

(திருவிசைப்பா -202)

எனப் பராந்தகன் மகனார் முதற்கண்டராதித்த சோழரும்'

“கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங்
காதலாற் பொன் வேய்ந்த காவலனும் "

(விக்கிரம சோழனுலா, வரிகள்-31,32)

எனக் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரும் போற்றியுள்ளார்கள்.

பகைவரைப் புறங்காணும் வெற்றித் திறத்தாலும் தனது நாட்டுமக்கள் எல்லாரும் எல்லாம் வல்ல சிவபெருமானைத் திருப்பதிக இன்னிசையாற் போற்றி இம்மை மறுமை இன்பங்களைப் பெற்று இன்புறுதல் வேண்டும் என்னும் - சிவபத்தித் திறத்தாலும் பிற்காலச் சோழமன்னர்கள் எல்லாருள்ளும் முதலில் வைத்து எண்ணத்தக்க பெருவேந்தன் முதலாம் இராசராச சோழன் ஆவான். தான் பெற்ற வெற்றிக்கெல்லாம் காரணமாக அமைந்தது எல்லாம் வல்ல சிவபெருமானது திருவருளே யென்னும் மெய்ம்மையினை உலக மக்களுக்கு உணர்த்தும் முறையில், தஞ்சையில் இவ்வேந்தனாற் கட்டப்பட்டுள்ள இராசராசேச்சுரத் திருக்கோயில் இவனது வெற்றிச் சின்னமாகத் திகழ்தலை வரலாற்றறிஞர் பலரும் நன்குணர்வர்.