பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தில்லைப் பெருக் கோயிலிற் சேமிக்கப் பெற்றிருந்த தேவாரத் திருமுறைகளைத் திருநாரையூரிற் பொல்லாப் பிள்ளையாரது திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளின் துணை கொண்டு தேடிக்கண்டு தொகுத்த சோழமன்னன் இராசராசன் அபயகுலசேகரன் என்னும் பெருவேந்தன் எனவும், அவ்வேந்தன் திருமுறைகளைக் கண்டு தேடித் தொகுத்தமை பற்றித் திருமுறை கண்ட இராசராச தேவர் என அழைக்கப் பெற்றான் எனவும் திருமுறை கண்ட புராணம் கூறும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடிய திருப்பதிகங்களில் தமக்குத் தெரிந்த ஒரு சில பதிகங்களையே சிவனடியார்கள் பாடக்கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்து உருகிய இராசராசனாசிய சோழ மன்னன், மூவர் பாடிய இனிய திருப்பதிகங்கள் எல்லா வற்றையும் தேடிக் கண்டு ஒரு சேரத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அப்பதிகங்களைப் பலவிடங்களில் தேடியும் முழுதும் கிடைக்கவில்லை.

அந்நிலையில் திருநாரையூரிற் பொல்லாப் பிள்ளையார் திருவருளை நிரம்பப் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளை வணங்கித் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். அவரும் மன்னனது விருப்பத்தினை மனத்திற் கொண்டு பொல்லாப் பிள்ளையாரை இறைஞ்சி வேண்டினார். தில்லையில் கூத்தப் பிரான் திருநடஞ் செய்யும் பொன்னம்பலத்தின் அருகிலே தேவார ஆசிரியர்கள் மூவருடைய கைகளின் அடையாளமுள்ள அறையினுள்ளே தேவாரத் திருமுறைகள் வைத்துப் பூட்டப் பெற்றுள்ள செய்தியைப் பொல்லாப் பிள்ளையார் அறிவுறுத்தியருளினார்.

அதனைக் கேட்டு மகிழ்ந்த நம்பியாண்டார் நம்பியும் அபய குலசேகரனும் தில்லையை அடைந்து கூத்தப் பெருமானை வணங்கினர். தில்லைச் சிற்றம்பலத்தின் மேற்றிசையிலுள்ள அறையிலே தேவாரத் திருமுறைகள் இருத்தலைத் தில்லை வாழ் அந்தணர்களிடம் தெரிவித்து அவ்வறையைத் திறக்கும் படி மன்னன் வேண்டிக் கொண்டான். அது கேட்ட அந்தணர்கள் மூவர்கையிலச்சினையுடன் பூட்டப் பெற்றுள்ள அவ்வறையினை