பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

அம்மூவரும் வந்தாலன்றித் திறக்கவியலாது என்றனர். உடனே சோழமன்னன் தில்லையம்பல வாணர்க்குச் சிறப்புடைய பூசனை செய்யச் செய்து தேவார ஆசிரியர் மூவர் திருவுருவங்களுக்கும் வழிபாடியற்றித் திருவீதிக்கு எழுந்தருளச் செய்து திருமுறைகள் சேமிக்கப் பெற்றிருந்த அறையின்முன் கொண்டு வந்து நிறுத்தி'மூவரும் வந்தனர், அறையினைத் திறந்திடுமின்' எனப் பணித்தான். அரசனது ஆணையால் அறை திறக்கப்பட்டது. அறையினுள்ளேயிருந்த தேவார ஏடுகள் கரையான் புற்றால் மூடப்பட்டுச் சிதைந்த நிலையிற் காணப்பட்டன. அவ்வேடுகளின் மேல் எண்ணெயைச் சொரிந்து அவற்றை வெளியில் எடுத்துப் பார்த்த அளவில், பெரும்பாலன பழுதுபட்டுச் சிதைவுற்றமை கண்டு மன்னன் பெரிதும் வருந்தினான். அந்நிலையில் இறைவனருளால் 'இக்காலத்திற்கு வேண்டுவனவற்றை மட்டும் செல்லரிக்காமல் வைத்தோம்' என்றதொரு அருள்வாக்கு யாவரும் கேட்கத் தோன்றியது. அது கேட்டு உள்ளந் தேறிய சோழமன்னன் எஞ்சியுள்ள திருப்பதிகங்களை மட்டும் சிதையாமலெடுத்து முன் போலத் தொகுத்துத் தரும்படி நம்பி யாண்டார் நம்பிகளை வேண்டிக் கொண்டான். திருஞான சம்பந்தர் பாடிய திருப்பதிகங்கள் 1, 2, 3, திருமுறைகளாகவும் திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் 4, 5, 6, திருமுறைகளாகவும், சுந்தரர் பாடிய திருப்பதிகங்கள் 7 ஆம் திருமுறையாகவும் வகுக்கப் பெற்றன. மன்னனும் நம்பியும் திருவெருக்கத்தம் புலியூரை அடைந்து திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபிற்பிறந்த இசைவல்ல அம்மையாரைத் தில்லைக்கு அழைத்து வந்து தேவாரத் திருமுறைகட்குப் பண் வகுத்தனர்.

இவ்வாறு நம்பியாண்டார் நம்பியின் துணை கொண்டு திருமுறைகளைத் தேடித் தொகுத்த சோழ மன்னன் தஞ்சை இராசராசேச்சுரந் திருக்கோயிலைக் கட்டிய முதலாம் இராச ராச சோழனேயென ஆராய்ச்சியாளர் கூறுவர். வேந்தர் பெருமானான இவன், தான் கட்டுவித்த தஞ்சை இராசராசேச்சுரத் திருக்கோயிலில் நாள் தோறும் தேவாரப் பதிகங்கள் பாடுதற்குப் பிடாரர் (ஓதுவார்) நாற்பத்தெண்மரையும் அவர்களுக்குத் துணையாக உடுக்கை வாசிப்போர், மத்தளம்