பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

முழக்குவோர் இருவரையும் நியமித்து நிபந்தம் வழங்கியுள்ளான். இச்செயதி,

"ஸ்ரீராஜராஜ தேர் கொடுத்த பிடாரர்கள் நாற்பத்தெண் மரும் இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் கொட்டிமத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின்மர்க்குப் பேராவ் நிசதடம் நெல்லு முக்குறுணி நிலத்தமாய் ராஜகேசரியோடெர்க்கும் ஆடவல்வானென்னும் மரக்காலால் உடையார் உள்ளூர்ப் பண்டாரத்திலே பெறவும் (தெ.இ.க. தொ. I எண்:65). என வரும் கல்வெட்டுப் பகுதியால் நன்கு விளங்கும். இவ்வாறு திருக்கோயிலில் ஓதுவார் நாற்பத்தெண்மரையும், இசைக்கருவியாளர் இருவரையும் நியமித்துத் தேவாரத் திருப்பதிகங்களைப் பண் பொருந்தப் பாடி இறைவனை வழிபடுதற்குரிய திட்டம் வகுத்த பெருமை முதலாம் இராசராச சோழனுக்கே உரியதாகும். இதுபற்றியே, "சேய திருமுறை கண்ட.. ராசராச தேவர்" (சேக்கிழார் புராணம்-) - என இம்மன்னன் பாராட்டப் பெற்றுள்ளான்.

திருமுறைகண்ட சோழன் எனப் போற்றப் பெறும் முதலாம் இராசராசன் தில்லையம்பல வாணர்பால் நிரம்பிய ஈடுபாடு உடையவன் என்பது தஞ்சைப் பெருங்கோயிலில் ஆட வல்லானை எழுந்தருளுவித்துள்ளமையாலும் அக்கோயிலிற் பயன்படுத்தப்படும் முகத்தலளவையாகிய மரக்காலுக்கு 'ஆட வல்லான்' எனப் பெயரிட்டுள்ளமையாலும் உய்த்துணரப்படும். 'சோழ மன்னர்கட்குத் தில்லையம்பல வாணரே - தெய்வம் என்பது 'கல்வெட்டுகளால் உணரப்படும் செய்தியாதலின், பிற் காலச் சோழர்களில் முதலாம் ஆதித்தன், பராந்தகன் முதலியோர் தில்லைப் பெருங்கோயிலுக்குப் பல திருப்பணிகளைக் செய்துள்ளார்கள் என்பது நம்பியாண்டார் நம்பிகளும், கண்டராதித்தரும் பாடியுள்ள திருமுறைப் பனுவல்களால் நன்கு விளங்கும். கண்டராதித்த சோழர்க்குப் பின் திருமுறை கண்ட சோழர் எனப் போற்றப் பெறும் முதலாம் இராசராச சோழனும் தில்லைப் பெருங் கோயிலிற் பல திருப்பணிகளைச் செய்திருத்தல் வேண்டும், அவர்கள் செய்த திருப்பணிகளைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் பிற்காலத்தில் அயலவர் படைகள் சிதம்பரம்