பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

கொடுக்கவும், திருவிழாவுக்கு வேண்டும் எண்ணெய்க்கும் வேண்டும் வழக்கத்துக்கும் பரிசட்டம் திருவிளக்கு எண்ணெய் முதலிய செலவுகட்கும் திருமாசித் திருநாளில் திருத்தொண்டத் தொகை விண்ணப்பஞ் செய்வதற்கும் ஆண்டொன்றுக்கு மேல்வாரம் இரண்டாயிரத் திருநூற்றைம்பதின் கலம் ஆக வருவாயுள்ள நாற்பத்து நாலு வேலி நிலம் நிபந்தமாக அளித்துள்ளார். அணுக்கி நக்கன் பரலையாராகிய இவரே இத்தில்லைப் பதியில் உள்ள சிங்களாந்தகன் என்னும் அறச்சாலையில் நாள்தோறும் பிராமணர் இருபத்தைவர் உண்பதற்கும், சமையல் ஆளுக்கும், தண்ணீர்க்கலம் கொண்டு வருவோனுக்கும் உடை முதலிய செலவுகட்கும் ஆக ஒராண்டுக்கு மேல்வாரமாக ஆயிரத்து இருநூற்று இருபத்தைந்து கலம் நெல் வருவாயுள்ள பத்து வேலி நிலமும் நிபந்தமாக அளித்துள்ளார். இது பற்றிய விவரங்கள் தில்லைப் பெருங்கோயிலின் முதற் பிரகாரத்தில் வடபுற மதிலில் கங்கை கொண்ட சோழனது 24ஆம். ஆட்சியாண்டில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டில் (தெ இ.க. தொகுதி IV எண் 223) விரிவாகக் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

மேற்குறித்து கல்வெட்டுச் செய்திகளை ஊன்றி நோக்குங்கால், இப்பொழுது தில்லைப் பெருங்கோயிலில் நிகழ்ந்து வரும் ஆனித்திருமஞ்சனத் திருவிழாவும், மார்கழித் திருவாதிரைத் திருவிழாவும் கங்கை கொண்ட சோழன் ஆட்சிக்காலத்திற்கு முன்பிருந்தே நிகழும் தொன்மை வாய்ந்தன என்பதும், இவ்விரு திருவிழாக்களிலும் அடியார்களுக்கும், அந்தணர்களுக்கும் அன்னம் பாலிக்கப் பெற்றதென்பதும் இவ்விரு திருவிழாக்களுடன் திருமாசித் திருநாளிலும் திருவிழா நிகழ்ந்ததென்பதும் அத்திருவிழாவில் 'தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என ஆரூரிறைவர் அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளிய திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகம் தில்லைக் கூத்தப் பெருமான் திருமுன்னர் விண்ணப்பஞ்செய்யப் பெற்றதென்பதும் நன்கு விளங்கும்.

பிற்காலச் சோழரது ஆட்சியில் சோழர்களின் பெண்வழி மரபில் தோன்றித் தமிழகத்தை ஆண்டவர்கள் முதற் குலோத்துங்கன் விக்கிரம சோழன் முதலியோராவர். சோழ