பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

நாட்டில் சிறந்த முறையில் ஆட்சி புரிந்த பெருவேந்தர்களுள் முதற்குலோத்துங்க சோழனும் ஒருவன். சிவபெருமான்பால் எல்லையற்ற பேரன்பினனாய், குடிமக்கள் மகிழச் சுங்கம் தவிர்த்த சோழனாகிய இம்மன்னன், கி.பி. 1070 முதல் 1120 வரை சோழநாட்டை நன்முறையில் ஆட்சி புரிந்துள்ளான். இவனது ஆட்சிக்காலத்தில் தில்லைப் பெருங்கோயிலின் திருப்பணி மிகச் சிறப்பாக நிகழ்ந்துள்ளது.

முதற்குலோத்துங்கன் தன் முன்னோர்களைப் போலவே தில்லைக் கூத்தப் பெருமான்பால் பேரன்பு செலுத்தியவனாவான். இவ்வேந்தன் தன் நண்பனாகிய காம்போச நாட்டு மன்னன் தனக்குக் காட்சிப் பொருளாகத் தந்த ஒளிதிகழ் பளிங்குக்கல்லினைத் தில்லைச் சிற்றம்பலத்தைச் சார்ந்துள்ள திருவெதிரம்பலத்தில் அணி திகழ வைத்தான். இச்செய்தி,

“ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்குக் காம்போஜராஜன் காட்சியாகக் காட்டின கல்லு இது - உடையார் இராசேந்திர சோழ தேவர் திருவாய் மொழிந்தருளி உடையார் திருச்சிற்றம்பலமுடையார் கோயிலில் முன் வைத்தது - இந்தக் கல்லு திருவெதிரம்பலத்துத் திருக்கல் சரத்தில் திருமுன் பத்திக்கு மேலைப் பத்தியிலே வைத்தது (Ep.Ind.Vol II.No,132).

எனத் தில்லைத் திருக்கோயிலில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டால் அறியப்படும்.

முதற்குலோத்துங்க சோழனுக்குச் சகோதரிகள் இருவர். இவர்கள் குந்தவை, மதுராந்தகி என்போராவர். இவ்விருவரும் தில்லையம்பலவாணர்பால் எல்லையற்ற பேரன்பினால் தில்லைத் திருக்கோயிலுக்குச் சிறப்புடைய திருப்பணிகள் செய்துள்ளார்கள். இவருள் குந்தவை என்பார், தில்லைச் சிற்றம்பலப் பெருமான் தண்ணீர் அமுது செய்தருளுதற்கென ஐம்பதின் கழஞ்சு நிறையுள்ள பொன்வட்டிலைத் தில்லைப் பெருங்கோயிலுக்கு உளமுவந்து வழங்கியுள்ளார். இச்செய்தி,

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் - சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழ தேவர் திருத்தங்கையார் இராஜராஜன் குந்தவை ஆழ்