பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

இவர்களை யடுத்துத் தில்லைக் கூத்தப் பெருமானை வணங்கித் திருவருள் பெற்றவர்கள் வியாக்கிரபாதர் மைந்தராகிய உபமன்யு முனிவரும் மனுவின் மைந்தனாகப் பிறந்து வியாக்கிர பாத முனிவரால் அன்பினால், வளர்க்கப் பெற்ற இரணியவர்மனும் ஆவார். இம் முனிவர்களுடன் ஒத்த காலத்தவரும் சிறந்த சிவயோகியாருமாகிய திருமூலதேவர் இம் முனிவர்களுடன் கூடித் தில்லைத் திருக்கூத்தினைக் காணும் பேறுபெற்றவர்.

கடற்கரைப் பகுதிகளில் வளரும் இயல்புடைய தில்லை யென்னும் தாவரம் அடர்ந்துள்ளமை பற்றி, தில்லைவனம் எனவும், வியாக்கிரபாத முனிவராகிய புலிமுனிவர் எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவனைப் பெரும்பற்றாகக் கொண்டு போற்றியமையால் பெரும்பற்றப்புலியூர் எனவும், எல்லாம் வல்ல இறைவன் நுண்ணிய ஞானமயமான அம்பலத்தில் ஆடல் புரிதலால் திருச்சிற்றம்பலம் எனவும் இத்தலம் அழைக்கப் பெறுவதாயிற்று. சிற்றம்பலம்-நுண்ணிய ஞான வெளி. சிற்றம்பலம் என்ற தமிழ்ச் சொல்லே வட மொழியில் சிதம்பரம் என்றாயிற்று.

எல்லாம் வல்ல இறைவன் புலிமுனியும் பதஞ்சலியும் போற்றத் தில்லைச் சிற்றம்பலத்திலே. திருக்கூத்து. இயற்றத் தொடங்கிய காலம் மிகவும் தொன்மையுடையதாகும். திருவாரூர்த் திருக்கோயிலின் தொன்மையைப் போற்றும் திருநாவுக்கரசர்,

"மாடமொடு மாளிகைகள் மல்குதில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே"
(6-34-3)

எனத் தில்லைச் சிற்றம்பலத்தின் தொன்மையினையும் உடன் இயைத்துப் போற்றியுள்ளமை காணலாம்.

பொற்பதியாசிய தில்லைத் தலமானது உலக புருடனின் இதய கமலமாய் இடைகலை, பிங்கலை, சுழுமுனை யென்னும் நாடி