பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

யருளும் சுத்தப்பெருமான் இவ்வுலகத்தவர் வாழ எழுந்தருளித் திருவுலா வருதற்குரிய இயங்குத் திருக்கோயிலாகிய திருத்தேரினைச் செம்பொற் கூரையுடையதாகப் பொன் வேய்ந்து அதன் கண் பருமை வாய்ந்த முத்து வடங்களை வரிசையாகத் தொங்கும்படி அணி செய்து, அத்தேரானது உலா வருதற்கு ஏற்றவாறு தில்லைப்பதியில் நிறைமணி மாளிகையுடைய நெடுந் திருவீதிகளாக நான்கு வீதிகளையும் விக்கிரம சோழன் திருவீதி எனத் தன் பெயரால் அமைத்துப் பசியபொன்னினால் உட்குழிவுடையதாகச் செய்யப் பெற்ற பரிகலம் (உண்கலம்) முதலாகச் செம் பொன்னாற் செய்யப்பட்ட கற்பகத் தருவினையும் பரிச்சின்னங்களையும் அளவில்லாதனவாக ஒளி பெற அமைத்துத் தனது பத்தாம் ஆட்சியாண்டில் சித்திரை மாதம் அத்த விண்மீனுடன் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் வளர்பிறைத் திரயோதசித் திதியில் இத்தகைய பல திருப்பணிகளைத் தில்லைப் பெருங்கோயிலிற் செய்து நிறைவேற்றினான்" என்பது மேற்குறித்த மெய்க்கீர்த்தி கூறும் செய்தியாகும்.

இவ்வாறு விக்கிரம சோழன் தில்லைப்பதியிற் செய்த திருப்பணிகள் யாவும் கி.பி. 1128 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பதினைந்தாம் நாளில் நிறைவேறின என்பது இம்மெய்க் கீர்த்தியிற் குறிக்கப்பட்டுள்ள காலக்குறிப்பினால் நன்கு அறியப்படும். தில்லைச்சிற்றம்பலத்தைச் சூழவுள்ள திருமாளிகைப் பத்தியாகிய முதற்பிரகாரம் இவ்வேந்தனால் அமைக்கப் பெற்றமையின் “விக்கிரம சோழன் திருமாளிகை” என வழங்கியதென்பது கல்வெட்டுகளாற் புலனாகின்றது. (Ins, No. 282, 284; and 287 of 1913).

விக்கிரமசோழன் பெரும் பற்றப்புலியூராகிய தில்லையிற் பெருவீதியமைத்த செய்தியைக் கவிச் சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர் இவன் மகன் இரண்டாங்குலோத்துங்கனைக் குறித்துப் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழில்,

'பாவக நிரம்பு திரு மாலும் மலரோனும்
பரந்த பதினெண் கணமும் வந்து பரவந்தம்