பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

ணர்க்கு வீதியில் மனை கட்டிக் கொடுத்தது, தில்லைப்பெருங் கோயிலுக்குக் களிற்று யானை கொடுத்தது, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆசிய மூவரும் எல்லாம் வல்ல முதல்வனாகிய சிவபெருமானது புகழ்த் திறத்தைப் பாடியவாறு அம்மூவர் அருளிய தேவாரப் பதிகங்கள் முழுவதையும் முன்போற் சிதலரிக்கவொண்ணாதவாறு அளவொத்த செப்பேடுகளில் எழுதித் தில்லைப்பெருங்கோயிலிற் சேமித்து வைத்தது, தில்லைக் கூத்தப்பெருமானுக்குத் திருநந்தவனம் அமைத்தது, தில்லைப் பெருமான் மாசிமக நாளில் கடலாட்டிற்கு எழுந்தருளுந் திருவிழாவில் அம்முதல்வன் வீற்றிருந்தருளக் கிள்ளைக் கடற்றுறையில் மண்டபம் அமைத்தது, தில்லைப் பெருங்கோயிலுக்கு ஆயிரம் பசுக்களை அளித்தது, தில்லையில் புலி மடுவின் அருகே வியாக்கிரபாதர் தந்தையார் மத்தியந்தன முனிவர் வழிபட்ட சுடலையமர்ந்தார் திருக்கோயிலைக் கற்றளியாக்கியது. தில்லை மூவாயிரவராகிய அந்தணர்கள் செல்வப் பெருக்கமுடையராதல் வேண்டும் என்னும் நல்ல நோக்கத்துடன் தில்லையருகேயுள்ள ஏரியிலிருந்து தண்ணீர் பாய்தற்கமைந்த மதகினைக் கல்லினாற் செய்தமைத்தது ஆகிய பணிகள் மேற்குறித்த செய்யுட் கல்வெட்டில் விரித்துரைத்துப் பாராட்டப் பெற்றுள்ளன. இவ்வாறே மணவிற் கூத்தன் காலிங்கராயனாகிய இவன் தில்லையிற் போன்றே திருவதிகை திருவீரட்டானத்திருக்கோயிலிலும் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். அப்பணிகள் யாவும் அக்கோயிலில் வரையப்பெற்றுள்ள இருபத்தைந்து வெண்பாக்களில் எழில் பெற விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

இவ்வாறு சோழரது அரசியல் ஆட்சிவளம் பெறவும், தமிழகத்தின் அருளியலாட்சி முறையாகிய சிவநெறி வளர்ச்சி பெறவும் மணவிற்கூத்தன் காலிங்கராயன் செய்துள்ள திருப்பணிகளில் சிறப்புடையதாகக் குறிக்கத் தகுவது. தேலார ஆசிரியர் மூவரும் பாடிய திருப்பதிகங்கள் முழுவதையும் செப்பேடுகளில் வரையச் செய்து சிவராச தானியாகத் திகழும் தில்லைப் பெருங்கோயிலிற் சேமித்து வைத்த திருநெறித் தமிழ்ப் பணியேயாகும். இத்திருப்பணியை விரித்துரைத்துப் போற்றும் முறையில் அமைந்தது.