பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

ஸ்ரீரங்கராயர் II

இவர் சகம 1503 (கி.பி. 1581-இல் மிளகுத் தரகு வருமானங் கொண்டு சிற்றம்பலவர்க்கு அபிஷேகம் செய்யவும், சகம் 1517 (கி.பி. 1595) இல் சிவகாமசுந்தரி ஐப்பசி பூரவிழாக் கொண்டருளவும் புறப்பேட்டை ஊரைத் தேவத்சனமாகக் கொடுத்துள்ளார். சகம் 1503 (கி.பி. 1581) - இல் ஏழு கிராமங்களின் வருமானத்தைக் கொண்டும், மிளகுத்தரகைக் கொண்டும் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை விழாச் செலவுகள் நடத்திவர ஏற்பாடு செய்துள்ளார்.


ஸ்ரீரங்கராயர் VI:

இவர் சகம் 1565 இல் தில்லைத் திருச்சித்திர கூடத்தில் கோவிந்தராசப் பெருமாள் முன் மண்டபத்தைப் பழுது பார்த்தார். புண்டரீகவல்லித் தாயார், சூடிக்கொடுத்த நாச்சியார் விமானங்களும் பழுதுபார்க்கப் பெற்றன. இவர்காலத்தில் ஆடூர், கருங்குழி, குரியாமங்கலம், மதுராந்தக நல்லூர், உடையூர் முதலிய கிராமங்களுக்குத் தீர்வை தள்ளுபடி செய்யப்பட்டது. இது நிகழ்ந்த காலம் 2.2.1644 என்று எல்.டி. சாமிக் கண்ணுப் பிள்ளையவர்கள் கணக்கிட்டுள்ளார்.


வீரபூபதிராயர்:


இவர் நிருத்தநாதன் (கூத்தப்பிரான்) திருமுன் விளக்குக்காக தனது அரசியல் பிரதானி செண்டப்பராசா ஆதித்த ராஜாவைக் கொண்டு 64 பசுக்கள் அளித்துள்ளார். இவர் காலம் புக்கா II காலமாக இருக்கலாம் என்று எபிகிராபிகா (1909 பக் 115) ஆண்டறிக்கை கூறும்


6. நாயக்க மன்னர்கள்:

நாகமநாயக்கர்:

மதுரையில் நாயக்கர் ஆட்சியை நிறுவிய விசுவநாத நாயக்கர் தந்தை நாகம நாயக்கர் சிதம்பரத்தில் ஒரு சரக்கறையை விலைக்கு வாங்கிக் கோயிலுக்கு அளித்துள்ளார்.