பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

ணாகக் கொண்டமையாலும், கி.பி. 1753-இல் பிரஞ்சுக்காரர் புவனகிரியைக் கைப்பற்றித் தில்லைக்கோயிலை அரணாகக் கொண்டு ஆங்கிலேயரைப் புறங்காட்டி யோடச்செய்தமையாலும் கி.பி. 1780-இல் நிகழ்ந்த மைசூர்யுத்தத்தில் ஸ்ர் ஹயர்வுட் என்பவர் இக்கோயிலைப் படை தங்கும் இடமாகக் கொண்டு எதிரியைத் தாக்கினமையா லும் சைவர்க்குத் தலைமைக் கோயிலாகவுள்ள இத் தில்லைப் பெருங்கோயிலானது பலவேறு இடிபாடுகளையடைந்தது. அழகிய சிற்பங்கள் அழிவுற்றன ஆங்கிலேயர் ஆட்சி இந் நாட்டில் நிலை பெற்ற பின்னரே இப்பெருங்கோயிலில் அமைதியான முறையில் நாட்பூசனையும் திருவிழாக்களும் முன்போலத் தொடர்ந்து நிகழ்வனவாயின.

காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் திருப்பணி

சிவநெறிச் செல்வராகிய இவர், தமிழகத்திற் சிறப்புடைய கோயில்கள் சிலவற்றுக்கு நிபந்தம் அளித்துள்ளார். தில்லைப் பதியிற் பலநாட்கள் தங்கியிருந்து நடராசப்பெருமானை வழி பட்டு நாட்பூசனைக்கும் திருவிழாக்களுக்கும் அறக்கட்டளை நிறுவியுள்ளார். தில்லைப் பெருங்கோயிலின் கிழக்குக் கோபுரத்தைப் பழுது பார்த்துத் திருப்பணி செய்துள்ளார்.

நகரத்தார் திருப்பணி

சைவமும் தமிழும் வளர்த்த தனவணிகச் செல்வர்களாகிய நகரத்தார் சார்பில் தில்லை நடராசப் பெருமான் திருக்கோயில் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகவும் விரிவான முறையில் திருப்பணி செய்யப் பெற்றது. தில்லையின் எல்லையில் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் நிறுவிய பெருங்கொடை வள்ளல் செட்டிநாட்டரசர் ராஜா சர் மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்களுடைய தந்தையார் சா. ராம முத்தைய செட்டியர்வர்கள் தில்லைப் பெருங்கோயிலின் முதற்பிராகாரத்தின் திருமாளிகைப்பத்தியினைப் புதுப்பித்தும், திருமூலட்டானே சுவரர் திருக்கோயிலையும் உமையபார்வதி திருக்கோயிலையும் புதுப்பித்தும்,இரண்டாம் பிராகாரத்தையொட்டி அணிவெட்டிக்கால் மண்டபங்களைக் கட்டியும், தில்லைப் பொன்னம்பலத்தை மேலும் பொலிவுறச் செய்தும் கி.பி. 1891-ஆம் ஆண்டில் குட முழுககு விழாவைச் சிறப்புற நிகழ்த்தினார்கள்.