பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

ஏரியிலிருந்து தில்லை நகரின் தெற்குப்பக்கமாக ஓடிவருகின்றது. இந்நகரின் மேற்கிலிருந்து வடக்குப் பக்கமாக ஓடி வரும் ஓடையொன்று இந்நகரத்தின் கிழக்கே வரும் இப்பாலமான் என்னும் சிற்றாறுடன் கலக்கின்றது. இந்நகரத்தின் மேற்றிசையிலும் ஆங்காங்கே ஓடைகள் உள்ளன. இவையனைத்தும் சேர்ந்து தில்லை நகரத்திற்கு அணியப்பெற்ற மாலைபோல் அமைத்துள்ளன. இவ்வோடைகளில் ஓடும்நீர் காவிரியாற்றிலிருந்து வரும் நன்னீராகும். இவ்வாறு பெரும்பற்றப்புலியூராகிய இத்தில்லைத் திருநகரம் காவிரியாற்றின் நன்னீரால் சூழப்பெற்றிருக்கும் அழகிய தோற்றத்தினை, 'பொன்னி வளைத்த புனல் சூழ் புலியூர்' (திருச்சிற்றம்பலக்கோவை) என வரும் தொடரில் மணிவாசகப் பெருமான் குறித்துள்ளமை காணலாம்.

இத்தில்லை நகரமாகிய இப்பதி இவ்விருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் கல்விப்பயிர் வளர்க்கும் கலை நிலையமாகத் திகழ்கின்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தப்பிள்ளையார், தில்லைப்பெருமானைக் காலந்தோறும் வழிபட்டு வருபவர், தில்லையின் கிழக்கேயுள்ள திருவேட்களத்தைத் தாம் தங்குவதற்குரிய இடமாகக் கொண்டிருந்தார் எனப் பெரியபுராணம் கூறுகின்றது. ஞானத்தின் திருவுருவாகிய ஆளுடைய பிள்ளையார் தங்கியிருக்கும் பேறு பெற்ற திருவேட்களமானது, செட்டி நாட்டரசர் பெருங் கொடைவள்ளல் அண்ணாமலைச்செட்டியார் அவர்களால் நிறுவப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தன்னகத்தே பெற்று விளங்குகின்றது. அவ்வாறே கி.பி, பதினான்காம் நூற்றாண்டில் தில்லைவாழந்தணர் மரபில் தோன்றிச் சைவசமயச் சந்தான ஆசிரியருள் மூன்றாமவரான மறைஞான சம்பந்தர்பால் உபதேசம் பெற்றுச் சைவசித்தாந்த சாத்திரங்களையும், கோயிற்புராணம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம் முதலிய இலக்கிய நூல்களையும் இயற்றியருளிய உமாபதி சிவாசாரியார் அவர்கள் தங்கியிருந்த இடம், சிதம்பரத்தின் கீழ்த்திசையிலேயுள்ள கொற்றங்குடி என்னும் பவித்திர மாணிக்க நல்லூராகும்.

தில்லைக்கூத்தப்பிரான் பாடிக் கொடுத்த சீட்டுக் கவியுடன் தன்னையடைந்த பெத்தான் சாம்பானுக்கு உமாபதிசிவம்