பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

இச்செய்தியினை, 'சிற்றம்பலத்து அடியேன் களிதரக் கார்மிடற்றோன் நடமாடக் கண்ணார் முழவம் துளிதரக் காரென ஆர்த்தன' (திருக்கோவையார் 324) எனவரும் திருக் கோவையார் தொடரால் அறியலாம். சிவபாத சேகரன் எனப் போற்றப்பெறும் இராஜராஜ சோழனால் திருமுறை கண்டு எடுக்கப்பட்டதும் மூவர் அருளிய இயலிசைத் தமிழாகிய இத் திருப்பதிகங்களுக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் தோன்றிய அம்மையார் ஒருவரைக் கொண்டு பண்டுபோல் இசையமைத்தற்குரிய அருள் நிலையமாக அமைந்ததும் இத் தில்லைப் பெருங் கோயிலேயாகும்.

“நரம்புடை யாழ் ஒலி முழவின் காதவொலி வேதஒலி
அரம்பையர்தங் கீத ஒலி அறாத்தில்லை”

(பெரிய தடுத்தாட்-9)

எனச் சேக்கிழார் பெருமான் இயலிசை நாடகமெனும் முத்தமிழ் வளர்ச்சிக்கும் இத் தில்லைப்பெருங்கோயில் நிலைக்களமாய் அமைந்த திறத்தை விரித்துரைத்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத்தகுவதாகும்.

சிவகாமியம்மை திருக்கோயிலில் முன் மண்டபக் கூரையில் வரையப் பெற்றுள்ள ஒவியங்கள் மிகவும் பழமை வாய்ந்தன. பாண்டிய நாயகம் திருக்கோயிலின் மேற்கூரையில் எழுதப் பெற்ற ஒவியங்களும் இத்திருக்கோயிலின் பிறவிடங்களில் அண்மையிலெழுதப் பெற்ற ஒவியங்களும் புதுமைப் பொலிவு பெற்றுத் திகழ்கின்றன. இத்திருக்கோயிலில் அமைந்த ஏழுநிலைக் கோபுரங்கள் நான்கும் இக்காலக் கட்டடப் பொறியாளர் பலரும் வியந்துபாராட்டும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.

தில்லைப் பெருங் கோயில் எழுநிலைக்கோபுரங்கள் நான்கினுள்ளும் கிழக்குக் கோபுரம், தரைமட்டம் முதல் வியாளம் வரை 35 அடி உயரமும் 108 அடி நீளமும் 60 அடி அகலமும் உடைய கருங்கற்கட்டிடமும், அதற்குமேல் வியாளம் முதல் கலசம் வரை 15 அடி உயரம் உடைய எழுநிலை மாடங்களும் ஆக 152 உயர முடையது. அதன்மேல் 7 அடி 6 அங்குலம் உயரமுடைய 13