பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

மக்களாலும் நிர்வகிக்கப் பெற்று வந்த செய்தியே இடம் பெற்றுள்ளமை மனம் கொள்ளத் தகுவதாகும். புறச்சமய மக்கள் படையெடுப்பினால் இக்கோயிற் பூசை தடைப்பட்ட நிலையில் கூத்தப்பெருமான் திருவுருவத்தையும் இன்றியமையாத பிற உடைமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் இக்கோயிலிற் பூசை புரியும் தில்லைவாழந்தணர்கள், தம் கடமையாக மேற் கொண்டு ஒழுகினமையாலும், மிக நெருக்கடியான காலத்தில் உயிர்த்தியாகம் செய்து திருக்கோயில் உடைமைகளைப் பாது காத்தமையாலும் இக்கோயிலின் நிர்வாகத்தைப் பிற்காலத்தில் தில்லைப் பொதுவார் எனப்படும் தில்லைவாழந்தணர் கவனித்து வருவாராயினர்.

முதலாம் சரபோசியின் ஆட்சியில் கி.பி. 1719-இல் ஏகோசி யரசராற் சிறப்புச் செய்யப்பெற்ற தொண்டை மண்டல வேளாளரும் சேறைகிழார் கோத்திரத்தினரும், நியமம் என்ற ஊரின் தலைவரும் ஆகிய ராயஸ்ரீ முதலியார் முத்துச் செல்லப்ப முதலியார் தருமமாகச் சைவப்பேரன்பர் தாண்டவமூர்த்தி சேரு வைகாரர் என்பார் வல்லத்துத்தோட்டமும் ஒரு ஆள் ஆயத்தீர்வையும் தில்லைச் சிதம்பரேசுவரசுவாமிக்கும் தில்லைக்கோவிந்தராயப் பெருமாளுக்கும் தான சாசனம் செய்து சிதம்பரம் அகோர பண்டாரம் சார்பிலே அரிசியப்ப முதலியார் கட்டளையினை நடத்திவரும் தாண்டவன் தோட்டம் சரவணைத்தம்பிரானுக்கு நீர்வார்த்துக்கொடுத்தார் என்பதும், சிதம்பரம் சபாபதிக் கட்டளையினை நடத்திவரும் சரவணைத்தம்பிரான் என்பவர் இத் தான சாசனத்தை ஏற்றுக்கொண்டு சூரியசந்திரர் உள்ள வரையும் இக்கட்டளையினை நடத்துவதாக ஒப்புக்கொண்டார் என்பதும் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 'தஞ்சை மராட்டிய செப்பேடுகள் - 50' என்ற நூலில் 7-ஆம் எண்ணுள்ள ' 'திருவாரூர்ச்செப்பேடு-1'- இல் குறிக்கப்பெற்றுள்ளன. (பக்கம் 55-61)

கி.பி. 25-8-1719-இல் அளிக்கப்பட்ட. இத்தமிழ்ச் செப் பேடு சிதம்பரம் - கோயிலுக்கு உரியதாகும். திருவாரூர்க் கோயிலிற் பாதுகாக்கப்பட்டிருத்தலால், திருவாரூர்ச் செப்பேடு, என்ற பெயரில் வெளியிடப்பெற்றுள்ளது. இச்செப்பேட்டிற்