பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சாதிவேறுபாடு கருதாது தீக்கை செய்தருளியதும், அவர் சிவ சமாதி கொண்டருளியதும் ஆகிய உமாபதி சிவாசாரியார் திருமடம் இங்கேதான் உள்ளது. மந்திரவழிச்செய்யும் சிவதீட்சையினைச் செயற்படுத்திக் காட்டிய இப்பதியிலே பொறியியற் கல்லூரியும், தொழில் நுட்பக்கல்லூரியும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தில்லைநகரமாகிய சிதம்பரத்தில் காஞ்சிபுரம் பச்சையப்பர் பெயரால் அமைத்த பச்சையப்பன் மேனிலைப்பள்ளியும், சிதம்பரத்திற்குக் குடிநீர் வழங்கிய திவான்பகதூர் இராமசாமிச் செட்டியார் பெயராலமைந்த இராமசாமிச் செட்டியார் மேனிலைப்பள்ளியும், சைவமும் தமிழும் வளரப் புலமைத் தொண்டு புரிந்த ஆறுமுகநாவலர் பெயராலமைந்த ஆறுமுக நாவலர் மேனிலைப்பள்ளியும், தில்லைப் பெருங்கோயில் திருப்பணியில் பெரும்பங்கு கொண்ட தரும பூஷணம் இரத்தினசாமிச் செட்டியார் நிறுவிய இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளியும், சுவாமி சகஜாநந்தர் நிறுவிய நந்தனார் அரசு ஆண், பெண் மேனிலைப்பள்ளிகளும், அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளியும் ஆக ஏழு கல்விநிலையங்களும் அரசினர் கலைக் கல்லூரி யொன்றும் சிறந்த முறையில் இயங்கிவருகின்றன. கலைக்கெலாம் பொருளாக நின்ற தில்லைச்சிற்றம்பலவர் எழுந்தருளிய இந்நகரத்திலே இத்தகைய கல்வி நிலையங்கள் கலை பயில மாணவர்களைச் செந்நெறியில் வளர்க்கும் செழுங்கலை நியமமாக நடைபெற்று வருதல் மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சியாகும்.