பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149


10. பிற்சேர்க்கை

1. தில்லை நடராசர் திருக்கோயிலில் கோவிந்தராசப் பெருமாள் இடம் பெற்ற வரலாறு

செந்தமிழ் நூல்களிலும் வடமொழி நூல்களிலும் தில்லைப் பெருங்கோயில் சைவசமயத்தார்க்குச் சிறப்புரிமையுடைய தலைமைக் கோயிலாகவே போற்றப் பெற்றுள்ளது. வியாக்கிர பாதராகிய புலிக்கால் முனிவர் திருமூலட்டானப் பெருமானை வழிபட்டுப் போற்றினமையால் பெரும் பற்றப்புலியூர் எனவும், தில்லைவனமாகிய இத்திருத்தலத்திலே பதஞ்சலி முனிவர் செய்த தவத்திற்கு அருள்கூர்ந்து எல்லாம் வல்ல சிவபெருமான் ஞான மயமான அம்பலத்திலே ஆனந்தக் கூத்து நிகழ்த்தியருளுதலால் தில்லைச் சிற்றம்பலம் எனவும் வழங்கப் பெறுவது இத்தில்லைப் பெருங் கோயிலாகும். திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரத் திருப் பதிகங்களும், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவையாகிய அருள் நூல்களும் திருமூலர் திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் ஈறாகவுள்ள ஏனைய திருமுறைகளும் தில்லைச்சிற்றம்பலத்தையே சிவ தலங்களெல்லாவற்றிலும் முதன்மையுடையதாகக் கொண்டு'கோயில்' என்னும் பெயராற் சிறப்பித்துப் போற்றியுள்ளன. சேரசோழ பாண்டியர்களாகிய தமிழ் வேந்தர் ஆட்சியிலும் இடைக்காலத்தில் வந்த பல்லவ மன்னர்கள் ஆட்சியிலும் பிற்காலத்தில் வந்த விசயநகர மன்னர் நாயக்கமன்னர் மராட்டிய மன்னர் ஆட்சியிலும் தில்லைப் பெருங்கோயில் கூத்தப் பெருமானுக்குரிய திருக்கோயிலாகவே கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளது. இத்திருக்கோயிலின் ஆட்சியுரிமைகள் அனைத்தும் சிவனடியாாகளாகிய மாதேஸ்வரர்களுக்கும் கோயிலில் ஸ்ரீ காரியமாகிய அகத்தொண்டு புரிந்து வரும் தில்லை வாழந்தணர் முதலியோர்க்கும் கோயில் நாயகஞ் செய்வார் ஆகிய அரசியலதிகாரிகட்கும் சமுதாயஞ் செய்வாராகிய ஊர்ப் பொதுமக்களுக்கும் உரியனவாகக் கோயிலில் வரையப்பெற்ற கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெற்றுள்ளன. சிதம்பரம் நடராசர் கோயிலில், வரையப் பெற்றுள்ள 270 க்கு மேற்பட்ட கல்வெட்டுக்களில் இக்கோயில் உடையார் திருச்சிற்றம்-