பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

களில் இவ்வேந்தனைக்குறித்துக் கூறப்படுவனவெல்லாம் வெறுங் கற்பனைக் கனதகளே; உண்மையாவன அல்ல என்பது வரலாற்றாசிரியர்கள் துணிபாகும். (பிற்காலச் சோழர் சரித்திரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, பக்கம் 95,96 பார்க்க).

இரண்டாங் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் தில்லைக் கோயிலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கோவிந்தராசப்பெருமாள் திருவுருவத்தை இராமாநுசர் கீழைத் திருப்பதியிற் கொண்டு சேர்த்து அங்கே பிரதிட்டை செய்தார் என இராமாநுஜ திவ்ய சரிதை கூறுகிறது. இராமாநுசரால் பிரதிட்டை செய்யப்பட்ட திருவுருவம் இன்றும் அங்கேயுள்ளதென்பதும், இப்போது சிதம்பரம் கோயிலிலுள்ள கோவிந்தராசப் பெருமாள் திருவுருவம் விசயநகர அரசர் அச்சுதராயர் காலத்தில் புதிதாகப் பிரதிட்டை செய்யப்பட்டதென்பதும் வரதராஜ ஐயங்கார் பாடிய பாகவதபுராணத்தில் திருவரங்கப்படலத்திலுள்ள 63, 99 ஆம் செய்யுட்களால் நன்கு புலனாகும். எனவே இரண்டாங் குலோத்துங்கசோழன் ஆட்சிக்காலமாகிய கி.பி. பன்னிரண்டாம் நாற்றாண்டிற்கும் அச்சுதராயர் ஆட்சிக்காலமாகிய கி.பி.பதினாறாம் நுாற்றாண்டிற்கும் இடைப்பட்டகாலத்திலே சிதம்பரம் நடராசப்பெருமான் கோயிலில் கோவிந்தராசப் பெருமாள் மூர்த்தம் இல்லையென்று தெரிகிறது. கி.பி 1251 முதல் 1271 வரை ஆட்சிபுரிந்தவரும் சைவவைணவசமயங்கள் இரண்டினையும் ஒப்ப மதித்துப் போற்றியவரும் 'ஆமுத்தமால்யதா' என்னும் நூலை இயற்றி நாச்சியாராகிய ஆண்டாளைப் போற்றியவரும் ஸ்ரீவைஷ்ணவரும் ஆகிய விசயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர், கி.பி. 1516-இல் பொட்டனூரில் தாம் பெற்ற வெற்றிக்கு அடையாளமாகத் தில்லை நடராசப்பெருமான் திருக்கோயிலின் வடக்குக் கோபுரத்தைக்கட்டி முடித்துப் பொன்னம்பல வாணர்க்கு நிலம் வழங்கியுள்ளார் (தெ. இ. க தொகுதி VII எண் 149). இதனை யுற்றுநோக்குங்கால் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கோவிந்தராசப் பெருமாள் சந்நிதியில்லையென்பதும், தில்லைப் பெருங்கோயில் பொன்னம்பல நாதராகிய சிவபெருமானுக்கே சிறப்புடைய திருக்கோயில் என்னும் கருத்துடையவர் கிருஷ்ண தேவராயர் என்பதும் நன்கு விளங்கும்.