பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

கிருஷ்ண தேவராயருக்குப் பின் கி.பி 1529-இல் பட்டத்துக்கு வந்த அச்சுததேவராயர் கி. பி 1539-இல் தில்லை நடராசர் கோயிலில் கோவிந்தராசப் பெருமானை மீண்டும் பிரதிஷ்டை செய்து வைகாநச சூத்திரத்தின்படி பூசைநடக்க 500 பொன் வருவாயுள்ள நான்கு கிராமங்களின் வரியை நீக்கிக் கொடுத்துள்ளார். இவர் பெருமாளை மீண்டும் பிரதிட்டை செய்த இடம் முற்காலத்தில் நந்திவர்மபல்லவன் பிரதிட்டை செய்திருந்த திண்ணையளவாகிய சிறிய இடமே என்பது இங்குக் கவனித்தற்குரியதாகும். ஆயினும் இங்கு எழுந்தருளுவித்த பெருமாளைப் பூசிக்க ஸ்ரீவைஷ்ணவர்களை நியமித்தமையால் பெருமாளை வழிபாடு செய்யும் உரிமையை அரசன் வழியாகப் பெற்ற அவ் வைணவர்கள் மெல்லமெல்லத் தங்களுக்குரியனவாக நடராசர் கோயிலிடங்களை, வலிதிற் கைப்பற்றிக்கொள்ள முயன்று வந்தார்கள். வேங்கடபதி தேவமகாராயர் ஆட்சியில் அவருடைய பிரதிநிதியாகச் செஞ்சியிலிருந்து ஆட்சிபுரிந்த வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயகன் என்னும் அதிகாரி வைணவர் முயற்சிக்கு உடந்தையாய்க் கி.பி. 1597-இல் நடராசர் கோயில் முதற் பிராகாரத்திலேயே கோவிந்தராசப் பெருமாளுக்குத் தனிக் கோயிலை அமைக்கத் தொடங்கினான். இந்நிலையில் தில்லைப் பெருங்கோயிலின் பூசையுரிமையைத் தொன்றுதொட்டுப் பெற்றுடையராகிய தில்லைவாழந்தணர்களும் நகரப் பொது மக்களும் நடராசப்பெருமானுக்கேயுரிய இக்கோயிலில் பெருமாளுக்கெனப் புதிதாகத் தனிக்கோயில் கட்டுதல் வேண்டாம் எனவும் இரண்டாம் பிராகாரத்தில் முன்னிருந்த இடத்திலேயே பெருமாளுக்குப் பூசை நிகழச் செய்தலே பொருத்தமாகும் எனவும் அவ்வதிகாரியை எவ்வளவோ முறை நயந்து கேட்டார்கள். கொண்டது விடாக் கொண்டம நாயக்கனாகிய அவ்வதிகாரி அவர்களது வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் கோவிந்த ராசர் சந்நிதியைப் பொன்னம்பலலாணர் சந்நிதிக்கு மிகவும் அருகிலேயே அமைக்கத் தொடங்கினான். அந்நிலையில் தில்லை வாழந்தணர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் அவ் வன் செயலைத் தடுத்து நிறுத்த உறுதி பூண்டனர்; தாங்கள் உயிரோடிருக்கும் வரை நடராசர் கோயிலின் உட்புறத்தில் கோவிந்தராசப் பெருமாள் கோயில் கட்டுதற்கு இணங்க மாட்டோம் என்று சொல்லி ஒருவர் பின் ஒருவராகக் கோபுரத்தின் மேலேறிக் கீழே