பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

ஆவர் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்து காலஞ்சென்ற C.S.சீனிவாசாசாரியார் அவர்கள் மனம் வருந்தி எழுதியுள்ளார்கள்.

கிருஷ்ணப்ப நாயக்கனுக்குப் பின் விசயநகர மன்னனாகிய சீரங்கராயன்-III கி.பி. 1643-இல் தில்லைக்கோவிந்தராசர் சந்நிதியை மேலும் விரிவுபடுத்த எண்ணி முன்பு இல்லாத புண்டரீகவல்லித்தாயார் சந்நிதி முதலிய புதிய சந்நிதிகளையும் தில்லைக்கோயிலில் அமைத்தான். இவர்களுடைய மதவெறி காரணமாகத் தில்லை நடராசர் கோயிலிற் பழமையாக இருந்த சிலசந்நிதிகள் இடிக்கப்பட்டு மறைந்துபோயின. இவ்வாறு வைஷ்ணவர்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் தில்லைக்கோயிலின் பெரும்பகுதியைத் தமக்கு உரிமையாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவாராயினர். அதனையுணர்ந்த தில்லைநகரச் சைவப் பெருமக்களும் தில்லைவாழந்தணர்களும் கொதித்தெழுந்து தில்லைக்கோயிலில் கோவிந்தராசப்பெருமாளுக்கு இனி இடமில்லையென்று கூறும் அளவுக்குப் பெருமாள் சந்நிதியையே அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவாராயினர். அந்நிலையில் கோவிந்தராசப் பெருமாள் பூசை முறையினைக் கண்காணிக்கும் உரிமையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் கி. பி. 1862-இல் தில்லைப் பெருங்கோயில் பூசை முறை உரிமையாளராகிய' தில்லைவாழந்தணர்களோடு ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டிய இன்றியமையாமை உண்டாயிற்று. சிதம்பரம் கோவிந்தராசப் பெருமாள் பூசை முறையைக் கவனிக்கும் உரிமையடைய வைஷ்ணவர்கள் தில்லைவாழந்தணர்கட்கு எழுதிக் கொடுத்த உடன்படிக்கையில் தாங்கள் கோவிந்தராசப் பெருமாளுக்குச் செய்து வரும் நித்தியபூசைகளைத் தவிர வேறு பிரமோற்சவம் நடத்துவதில்லையெனவும், தில்லையில் நடராசப்பெருமானுக்குத் தொன்று தொட்டு நடைபெற்று வரும் நித்திய பூசைகளிலும் திருவிழாக்களிலும் தாம் தடையாக இருப்பதில்லையெனவும் ஒப்புக்கொண்டு உறுதி கூறியுள்ளார்கள். இவ்வுறுதியின் பேரில் கி. பி. 1867-இல் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. தில்லைப் பெருங்கோயிலில் சைவர் வைணவர் ஆகிய இருதிறத்தார்க்கும் ஏற்பட்ட உடன்பாடும் தில்லைவாழந்தணர்கள் பெற்றுள்ள நீதிமன்றத் தீர்ப்பும் காரணமாகத் தில்லைப் பெருங்கோயி-