பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தினைத் தந்து மறைந்தருளினார். அன்று முதல் அவ்விளைய முனிவர், வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்) என்னும் பெயருடையராய், சிவபெருமானைத் தாம் விரும்பிய வண்ணம் புது மலர்களால் வழிபாடு செய்து மகிழ்ந்திருந்தார். இவ்வாறு புலிக்கால் முனிவர் வழிபட்ட காரணத்தினால், தில்லைவனமாகிய இப்பதி புலியூர் எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. வியாக்கிரபாத முனிவர் உலகியல் பற்றுக்களை அறவேநீக்கி எல்லாப் பொருட்கும் சார்பாகிய இறைவன் ஒருவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்தமையால் புலியூர் என்னும் இப்பதி பெரும்பற்றப்புலியூர் எனச் சிறப்புடைய அடைமொழியுடன் திருநாவுக்கரசுப் பெருமானால் போற்றப்படும் சிறப்புடையதாயிற்று.

தில்லைப்பதியாகிய புலியூரில் வியாக்கிரபாத முனிவர் திருமூலட்டானத்துப் பெருமானை வழிபட்டிருக்கும் நாளில், அவர் தந்தையார் மத்தியந்தன முனிவர் தில்லையை யடைந்து, தம் மைந்தர்க்கு நற்குடிப்பிறந்த ஒரு மங்கையை மணஞ் செய்து வைத்தல் வேண்டும் என்னும் தமது விருப்பத்தை வெளியிட்டார். வியாக்கிரபாதரும் தம் தந்தையார் விருப்பத்திற்கு உடன்பட்டார். மத்தியந்தன முனிவர், வசிட்ட முனிவரின் தங்கையாரைத் தம் மைந்தர்க்கு மணம் செய்து வைத்தார். வியாக்கிரபாதரும் அவர் மனைவியாரும் தில்லையில் தங்கி இறைவனை வழிபட்டிருக்கும் நாளில், அவ்விருவர் செய்த தவத்தின் பயனாக உபமன்யு என்னும் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை, வசிட்ட முனிவரின் மனைவியார் அருந்ததியம்மையார் எடுத்துச் சென்று, தம்பாலுள்ள காமதேனு என்னும் தெய்வப்பசு பொழிந்தபாலை ஊட்டி வளர்த்து வந்தார்.

பின்னர், புலிக்கால் முனிவரும் அவர் மனைவியாரும் தம் குழந்தையைத் தம்மோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்னும் விருப்பத்தால், உபமன்யுவைத் தில்லைக்கு அழைத்து வந்து இனிய தின்பண்டங்களும் தீம்பாலும் ஊட்டினர். காமதேனுவின் இனிய பாலையருந்தி வளர்ந்த உபமன்யு ஆகிய அக்குழந்தை, அவ்வுணவையுண்ணாது உமிழ்ந்து விட்டுப் பசிதாங்காது அழுவதாயிற்று. அது கண்டு வருந்திய வியாக்கிரபாதரும் அவர் மனை