பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

கொம்புகளுக்கிடையே நின்று அம்பிகை காணத் திருநடம் செய் தருளினார். தேவர்கள் வணங்கித் துதித்தனர். அதுமுதல் திரயோதசி திதியன்று மாலைப்பொழுது பிரதோஷம் {பாபத்தைப் போக்கும் காலம்) என வழங்கலாயிற்று.

சிவராத்திரி

மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி பதினாலாம் நாள்) இரவு பதினான்கு நாழிகை இறைவன் இலிங்கமாகத் தோன்றிய காலம். இதுவே மகா சிவராத்திரி என வழங்கப் பெறுகின்றது. இந்தநாளில் நேரிடும் திரயோதசி சிவபெருமானுக்கு உடம்பாகவும், சதுர்த்தசி சத்தியாகவும் சிவாகமம் கூறும். சிவராத்திரி நான்கு காலங்களிலும் ஆன்மார்த்த பூசையும் பரார்த்த பூசையும் நிகழ்த்தல் வேண்டும். இவற்றை அன்புடன் நிகழ்த்துவோர் இம்மை மறுமை யின்பங்களையும், முடிவில் முத்தியின்பத்தையும் பெறுவர். சிவராத்திரியாகிய இக்காலம் திருமால் பிரமர் பொருட்டுச் சிவபெருமான் 'இங்குற்றேன் என இலிங்கத்தே தோன்றியகாலமாகும்'. பிரமகற்பத்திலே நான்கு யாமங்களிலும் சத்திசிவபெருமானைப் பூசித்தார். உமையம்மையார் விளையாட்டாகச் சிவபெருமானின் கண்ணை மூட உலகங்கள் இருண்டன. அக்காலத்தில் தேவர்கள். சிவபெருமானை வணங்கினர். தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபோது உலகெலாம் அழிக்கும் வேகத்துடன் எழுந்த ஆலகால நஞ்சினைச் சிவபெருமான் உட்கொண்டு தன் கண்டத்தில் அடக்கியருளினான். அந்நஞ்சு இறைவனைப் பீடிக்காமல் இரவு முழுவதும் தேவர்கள் இறைவனைப் பூசித்தகாலம் இச்சிவராத்திரியேயாகும். ஒரு கற்பத்தில் அண்டங்களெல்லாம் இருள் மூடிய நிலையில் அவ்விருள் நீங்க உருத்திரர் இறைவனைப் பூசனை புரிந்ததும் சிவ ராத்திரி காலமேயாகும்.

சிவசாதனம்

திருநீறு, உருத்திராக்கம், திருவைந்தெழுத்து என்பன, திருநீறு பராசத்தியின் வண்ண மாகும். 'பராவணமாவது நீறு' 'என்பது திருஞான சம்பந்தர் அருள் வாக்காகும்.