பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171

அட்டவீரட்டம்

சிவபெருமான் பிரமனது தருக்கினையடக்குதல் வேண்டி அவனுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளிய இடம் திருக்கண்டியூர். அந்தகாசுரனைக் கொன்ற தலம் திருக்கோவலூர். திரிபுரத்தை எரித்தழித்த தலம் திருவதிகை. தக்கனது தலையைத் தடிந்த தலம் திருப்பறியலூர். சலந்தராசுரனைத் தன் காற் பெருவிரலாற் கீறியமைத்த சக்கரத்தினால் தலையரிந்த தலம் திருவிற்குடி. கயமுகாசுரனாகிய யானையினைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்த தலம் வழுவூர். மன்மதனை எரித்த தலம் திருக்குறுக்கை. மார்க்கண்டேயர்க்காகக் கூற்றுவனை உதைத்த தலம் திருக்கடவூர். இங்கே கூறப்பட்ட எட்டுத் திருத்தலங்களும் சிவபெருமானுடைய வீரச் செயல் வெளிப்பட்டுத் தோன்றுதற்கு நிலைக்களமாய் விளங்குதலால் திருவீரட்டம் எனப் போற்றப் பெற்றன.

பஞ்சபூதத்தலங்கள்

எல்லாம் வல்ல இறைவன் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களின் வடிவில் எழுந்தருளியுள்ளான். அக்குறிப்பினை விளக்கும் திருத்தலங்கள்:

காஞ்சி திருவேகம்பம், திருவாரூர் -- நிலம்
திருவானைக்கா -- நீர்
திருவண்ணாமலை -- தீ
திருக்காளத்தி -- காற்று

தில்லைச் சிற்றம்பலம் -- ஆகாயம்.

சத்தவிடங்கத்தலங்கள்

முசுகுந்தச் சக்கரவர்த்தி தேவர்கோமானாகிய இந்திரனிடமிருந்து தான்பெற்று வந்த தியாகராசர் திருமேனி ஏழினையும் வைத்து வழிபட்ட திருத்தலங்கள் ஏழு. அவை: திருவாரூர், நாகப்பட்டினம், திருநள்ளாறு, திருமறைக்காடு, திருக்காறாயில், திருவாய்மூர், திருக்கோளிலி என்பன.

அட்டமூர்த்தம்

சிவபெருமான் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஞாயிறு, திங்கள், ஆன்மா. என்னும் எட்டினையும் தன் திருமேனியாகக்