பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வியாரும் திருமூலட்டானப்பெருமான் முன்பு அக்குழந்தையைக் கொண்டு வந்து கிடத்தினர், எவ்லாம் வல்ல சிவபெருமான் அக்குழந்தையின் பொருட்டுத் தெய்வத்தன்மை வாய்ந்த பாற் கடலையே வரவழைத்து உணவாக ஊட்டினார். உபமன்யு ஆகிய அக்குழந்தை திருப்பாற்கடலைப் பருகிக்களித்திருந்தது. தில்லைப்பெருமான் உபமன்யு ஆகிய குழந்தையின் பசி தீரப் பாற்கடலையழைத்தருளிய அருட்செயலைப் 'பாவனுக் காயன்றுபாற்கடலீந்து' (4-107-6) என அப்பரடிகளும், 'பாலுக்குப்பாலகன்வேண்டியழுதிடப் பாற்கடலீந்தபிரான், {திருப்பல்லாண்டு-) எனச்சேந்தனாரும் குறித்துப் போற்றியுள்ளனர். புலிக்கால் முனிவரும் கவலை நீங்கித் திருமூலட்டானப் பெருமான் சந்நிதியில் சிவயோகத்திலமர்ந்து அப்பெருமான் திருவடியில் கருத்தொன்றுபட்டு இருந்தார். அப்பொழுது' அவருள்ளத்தே, சிவபெருமான் தேவதாரு வனத்தில் வாழ்ந்த முனிவர்களின் பொருட்டு நிகழ்த்திய ஐந்தொழில் இன்பக் கூத்தின் வரலாறு நினைவில் தோன்றியது. அதனைத் தெரிந்த அளவிலே சிவபெருமான் திருக்கூத்தியற்றிய தேவதாரு வனத்தில் அடியேன் இருக்கப் பெறாமல் இந்தவிடத்தில் இருக்கப் பெற்றேனே. இறைவன் ஆடிய திருக்கூத்தினை யான் காணுமாறு எங்ஙனம்? என்று, பெரிதும் நெஞ்சம் நெகிழ்த்துருகி வருந்தினார். இத்தில்லையம்பதியே நிலவுலகத்திற்கு நடுநாடியாயிருத்தலால் இதன் கண்ணேதான் சிவபெருமான் ஐந்தொழில் திருக்கூத்து நிகழ்த்தியருளுவான், ஆதலால் அகத்தே காணுவதற்குரிய அத்திருக்கூத்தினை இத் தில்லையம்பலத்தின் கண்ணே புறத்தேயும் காணப்பெறுவேன், என்று தவக்காட்சியால் உணர்த்த வியாக்கிரபாத முனிவர் தில்லைப்பதியிலேயே திருமூலட்டானப்பெருமானை வழிபாடு செய்து கொண்டு இருப்பாராயினார்.

தேவதாரு வனத்தில் வாழ்ந்த நாற்பத்தெண்ணாயிர முனிவர்களும் தம்முடைய தவவன்மையினையும் தம் மனைவியரது கற்பின் திண்மையினையும் எண்ணி எல்லாவகையாலும் தாமே உயர்ந்தோர் எனச் செருக்குற்று இறைவனை வழிபடாதிருந்தனர். அப்பொழுது சிவபெருமான், திருமால் மோகினி