பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

யாய்த் தம்முடன் வர, தாம் பிச்சைத் தேவராய்த் தேவதாரு வனத்திற்குச் சென்று அங்குவாழும் முனிவர்களின் தவவுறுதியினையும் அவர்தம் மனைவியரது மனத்திண்மையையும் நெகிழச் செய்தனன். அதுகண்ட முனிவர்கள் எக்காலத்தும் அழிவின்றியுள்ளவன் இறைவன் என்பதனையுணராமல் அம் முதல்வனை யழித்தல் வேண்டித் தீய வேள்வியினைச் செய்தனர். அவ்வேள்வியிலிருந்து தோன்றிய புலி இறைவன் மேற் பாய்ந்தது. அதனை இறைவன் அழித்து அதன் தோலை யுரித்து உடுத்துக் கொண்டனன். வேள்வியிலிருந்து சீறிவந்த பாம்பினைத் தன்கைக்குக் கங்கணமாக அணிந்து கொண்டனன். பின்னர் இவ்வேள்வியிலிருந்து முயலகன் என்னும் கொடியோன் தோன்றி எதிர்த்தனன். இறைவன் அவன் முதுகினை நெரியும்படி வலத்திருவடியால் மிதித்துக்கொண்டனன். அது கண்ட முனிவர்கள் இறைவன் மேற் சாபமொழிகளடங்கிய மந்திரங்களை ஏவினர். இறைவன் அம்மந்திரங்களைச் சிலம்புகளாகத் தொகுத்துத் தன் திருவடியில் அணிந்து கொண்டான். பின்பு! அம் முனிவர்களால் கண்டு தாங்கவொண்ணாத கடுங்கூத்தினை ஆடியருளினான்.. அந்நிலையில் அக்கூத்தின் கடுமையைத் தாங்கிக் கொள்ள இயலாத முனிவர் அனைவரும் மயங்கி வீழ்ந்தனர். அதுகண்டு இறைவனருகே நின்ற திருமாலும் நடுக்க முற்றார். பேரருளாளனாகிய இறைவன், அம் முனிவர்களின் துயரங்களைப் போக்கி அவர்கட்கு அருள் செய்யத் திருவுளங் கொண்டு, எவ்வுயிர்க்கும் இன்னருள் சுரக்கும் ஆனந்தத் திருக்கூத்தை அவர்கள் கண்டு மெய்யுணர்வு பெறும்படி ஆடியருளினான். அதனைக் கண்ட உமையம்மையும், திருமாலும் ஏனைத் தேவர்களும் பேரின்பக் கடலில் திளைத்து மகிழ்ந்தனர். தேவதாரு வனத்து முனிவர்களும் தம் செருக்கடங்கி இறைவனைப் பணிந்து, தமது பிழையினைப் பொறுத்தருளும்படி வேண்டினர். சிவபெருமானும் முனிவர்களது ஆணவ வலியெலாம் திருவடிக்கீழ் அடங்கிக்கிடக்கும் முயலகன் பால் வந்து ஒடுங்கும்படி அருள் செய்து மறைந்தருளினார்.

பின்பு, திருமால், தம் இருக்கையாகிய பாற்கடலையடைந்து பாம்பணையிற் பள்ளிகொண்டு தாம் கண்ட இறைவனது ஆனந்தத் திருக்கூத்தினையே யெண்ணி யெண்ணிப் பெருங்களிப்