பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கிய அவ்வறிவு பூமியை விட்டுப்பிரியாது பூமிக்கு இதயத்தான மாகிய இத்தில்லைப்பதியாக அமைந்திருக்கும் உடம்பினுள்ளே தங்கிய ஆன்மாவிலே நாம் பிரியாதிருத்தல் போலவே, பூமியிலே ஞான வெளியாகிய இப்பதியிலே நாம் நீக்கமறத் தங்கியிருப்போம். ஆதலால், தேவர்களே இத்தில்லைப்பகுதியை வளைத்து ஒரு சபையாக அமையுங்கள்' எனக் கூத்தப் பெருமான் அங்குள்ள தேவர்களை நோக்கிப் பணித்தருளினார். அது கேட்ட தேவர்கள் அத்தகைய சபையை அமைப்பதற்கு வேண்டிய பொருள் யாது என்று அறியும் பொருட்டு இறைவன் சந்நிதியிலே மலர்களைத் தூவி வணங்கினார்கள். அப்பொழுது நடராசப்பெருமான் தேவர்களை நோக்கி 'பழைய வேதாகம நூல்களிலே ஞானமயமாகிய சபைக்கு இரண்மய கோசம் என்று ஒரு பெயருண்டு. அது பூவுலகத்தார் காணும் பொழுது முழுமையும் பொன்மயமாகும்' எனத்திருவாய் மலர்ந்தருளினார். அது கேட்ட தேவர்கள் மாற்றற்ற உயர்ந்த செம்பொன்னைக் கொண்டு அவ்விடத்தில் இறைவன் ஆடல் புரிதற்கேற்ற கனகசபையை அமைத்தார்கள்.

அன்று தொடங்கி அருளாளனாகிய நடராசப் பெருமான் சிவகாமியம்மையாரோடும் பொன்னம்பலத்திலே தேவர் முனிவர் முதலிய யாவரும் தம்முடைய திருக்கூத்தினைத் தரிசித்து உய்யும்படி அருள் புரிந்து விளங்குகின்றார்.

இறைவனது அனவரத தாண்டவத்தை இடைவிடாது தரிசித்து மகிழும் பெருவேட்கையால் திருமால் நான்முகன் இந்திரன் முதலிய தேவர்களும் வியாக்கிரபாதர், பதஞ்சலி மூவாயிர முனிவர் முதலியோரும் முத்தியை நல்கும் தில்லைப்பதியிலே தங்கிச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து நடராசப்பெருமானை நாள்தோறும் வழிபட்டிருந்தார்கள். நான்முகன் கங்கைக் கரையிலுள்ள அந்தர்வேதி என்னுமிடத்தே ஒரு வேள்வி செய்யத் தொடங்கினான் அவ்வேள்விக்குத் தில்லைவாழந்தணர்களையும் தேவர்களையும் அழைத்து வரும்படி நாரத முனிவரைத் தில்லைக்கு அனுப்பினான். நாரத முனிவரது சொல்லைக் கேட்ட முனிவர்களும் தேவர்களும் “இங்கே இறைவனது ஆனந்தத் திருக்கூத்தின் அமுதத்தைப்பருகும் நாங்கள் வேள்வியின்