பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கடமை உனக்குரியது. ஆகவே நீ தவஞ் செய்ய எண்ணுதல் தகாது' என்றார். அதுகேட்ட சிங்கவன்மன் தனது உடல் நோய் அரசாட்சியினை மேற்கொள்ளுதற்குத் தடையாயிருத்தலை முனிவரிடம் தெரிவித்துக் கொண்டான். அப்பொழுது வியாக்கிரபாதர் 'நாம் வரும் வரையிலும் இங்கேநில்' என்று சிங்கவன்மனைச் சிவகங்கைக்கரையில் நிற்கச்செய்து பதஞ்சலி முனிவருடன் கூத்தப் பெருமான் சந்நிதியை யடைந்து அவ்விருவரும் இறைவனை வேண்டி நிற்க, அம்முதல்வன் அருள் புரிந்தவண்ணம் சிங்கவன்மளைச் சிவகங்கையில் நீராடச் செய்தனர். அவ்வாறே சிங்கவன்மன் சிவகங்கையில் நீராடிய நிலையில் உடல் நோய் முற்றும் நீங்கிப் பொன்னிறம் பெற்று இரணியவன்மனாக எழுந்தான். அந்நிலையில் வியாக்கிரபாத முனிவர் இரணியவன்மனுக்குத் திருவைந்தெழுத்து உபதேசித்து நடராசப் பெருமான் திருமுன்னே அவனையழைத்துச் சென்று இறைவனது திருக்கூத்துத் தரிசனத்தைக் காணும்படி செய்தருளினார்.

கூத்தப்பெருமானது திருவருள் பெற்ற, இரணியவன்மன், இறைவனது எல்லையில்லா ஆனந்தத் திருக்கூத்தில் திளைத்து நெஞ்சம் கசிந்து மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர் மல்கிப் பலமுறை விழுந்து வணங்கினான். வியாக்கிரபாதர் இரணியவன மனை அழைத்துக் கொண்டு திருமூலட்டானமுடையாரையும் திருப்புலீச்சுரமுடையாரையும் திருவனந்தேச்சுரமுடையாரையும் வணங்குலித்துத் தம் ஆசிரமத்தையடைந்து தம் மனைவியாரை நோக்கி 'நீ உபமன்னியுவுக்குப்பின் பெறாது பெற்றபிள்ளை இவ்விரணியவன்மன்' என்றார். உடனே இரணியவன்மனும் அன்னையின் திருவடிகளை வணங்கினான். அம்மையாரும், 'சபாநாதர் தமக்குத் தந்தருளிய இரத்தினம் இப்பிள்ளை' என அன்புடன் தழுவிக் கொண்டார். இரணியவன்மனும் நாள்தோறும் சிவகங்கையில் நீராடித் தில்லைப் பெருமானை வழிபட்டு வியாக்கிரபாதருக்கும் பதஞ்சலி முனிவர்க்கும் தொண்டு செய்துகொண்டு இருந்தனன்.

இவ்வாறிருக்கும் நாளில் கௌட தேச மன்னன் மனு தன் னுடைய அரசினை மூத்த குமாரனாகிய இரணியவன்மனைக்