பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

காலாள் ஆகிய சேனைகளையும் அமைச்சர்களையும் கொண்டு விரைவில் இங்கு வருவாயாக, அவ்வாறு வரும் வழியில் அந்தர்வேதியில் வேள்விக்குச் சென்றிருக்கும் தில்லை மூவாயிரவர்களையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு வருவாயாக' எனப் பணித்தருளினார்.

இரணியவன்மன் கூத்தப் பெருமானையும் வியாக்கிரபாதரையும் அவர் மனைவியாரையும் பதஞ்சலி முனிவரையும் வணங்கி விடைபெற்றுக்கொண்டு வசிட்ட முனிவருடன் கௌட தேசத்தை அடைத்தான். தம்பிமார்களும் நகரமக்களும் எதிர்கொள்ளத் தன் நகரத்திற் சென்று, 'தாய் முதலியோரை வணங்கி, சில நாள் அங்கே தங்கியிருந்தான். பின்பு தம்பிமார் அமைச்சர் முதலியோருடன் தில்லைக்குப் புறப்பட்டு, வழியில் அந்தர்வேதியை அடைந்து அங்கிருந்த தில்லை மூவாயிரவரையும் தேர்களில் ஏற்றிக்கொண்டு தில்லை வனத்தினை அடைந்தான். அவனுடன் வந்த அந்தணர்கள் தாங்கள் ஏறி வந்த தேர்களைக் கனகசபையின் வடமேற்குப் பக்கத்தில் நிறுத்திக் கொண்டு இறங்கினர். மூவாயிரவரும் வியாக்கிரபாத முனிவர்க்குத் தங்களை எண்ணிக் காட்டிய பொழுது அவருள் ஒருவரைக் கானவில்லை. அந்நிலையில் இரவனியவன்மன் திகைத்து நின்றான். அப்பொழுது அங்குள்ள எல்லாரும் கேட்கும்படி, 'இவ் அந்தணர்கள் எல்லோரும் நம்மை ஒப்பாவர்; நாம் இவர்களில் ஒருவர்' என்றதொரு அருள்மொழி

தில்லையம்பலவாணர் திருவருளால் தோன்றியது. அது கேட்ட அந்தணர்கள் அச்சமும் நடுக்கமும் உடையவராய் தங்களுக்குள்ளே, ஒருவர் ஒருவரை வணங்கி எழுந்து பொன்னம்பலத்தை வலம் வந்து 'கூத்தப்பெருமானைப் போற்றி அம்பலத்தைச் சூழ இருந்தார்கள். உத்திரவேதியில் திகழ்ந்த வேள்விக்குச் சென்றிருந்த மூவாயிரவரும், கனகசபையின் வடமேற்குப் பகுதியில் தேரை நிறுத்தி இறங்கினர். இத்தலபுராணச் செய்தியை நினைவு கூறும் முறையில் பாண்டிய நாயகத்தூண்களில் தேர்கள் செதுக்கப் பெற்றுள்ளமை காணலாம். இரணியவன்மன் தில்லையின் கிழக்குத்திசையிலே 'கொற்றவன் குடி' என ஒரு நகரம் செய்வித்து அங்கிருந்தான். அங்கு அரசு வீற்றிருந்தான்.