பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

தில்லையில் எல்லோரும் இறைவனது திருக்கூத்துத் தரிசனம் செய்து கொண்டிருக்கும் நாளில் வியாக்கிரபாத முனிவர் "இரணியவன்மன் இந்நாட்டினை ஆளக்கடவன்: இவன் தம்பிமார் கௌட தேசத்தை ஆளக்கடவர்" என்றார். அதுகேட்டு மகிழ்ந்த பதஞ்சலி முனிவரும் வசிட்ட முனிவரும் ஏனைய முனிவர்களும் அப்படியேயாகுக' என்றனர். வியாக்கிரபாதர் இரணியவன்மனுக்குத் திருமணம் செய்வித்து முடிசூட்டிப் புலிக் கொடி கொடுத்துச் சோழ மன்னனாகச் செய்தார். இரணியவன்மனுடைய தம்பிமார் விடைபெற்றுக்கொண்டு நால்வகைச் சேனைகள் சூழச்சென்று கௌட தேசத்தை அடைந்து அந்நாட்டினை ஆட்சி புரிந்தனர். இரணியவன்மன் வியாக்கிரபாத முனிவர் பணித்த வண்ணம் கூத்தப் பெருமானுக்குத் திருவம்பலமும், திருமூலட்டானேசுரர்க்குத் திருக்கோயிலும் பிற திருப்பணிகளும் செய்து நாள் வழிபாட்டிற்கும் திருவிழாக்களுக்கும் வேண்டிய நிபந்தங்களைச் செய்தனன். இத்தொன்மை வரலாறு உமாபதி சிவாசாரியார் பாடிய கோயிற் புராணத்தில் விரித்துக் கூறப்பெற்றுள்ளது.

கண்ணபிரானுக்குச் சிவ தீக்கை செய்த உபமன்யு முனிவரும் தில்லைக்கு வந்து கூத்தப் பெருமானது திருநடனத்தைக் கண்டு வணங்கி நல்வாழ்வு பெற்றார். சாமவேதத் தலைவர்களுள் ஒருவராகிய சைமினி முனிவர் என்பவர் வேதம் ஒருவராற் செய்யப்படாது சுயம்புவாயுள்ளது. அது கரும காண்டம் ஞான காண்டம் என்னும் இருபகுதிகளையுடையது. இவ்விரு பகுதிகளுள் கருமகாண்டம் ஒன்றினையே பிரமாணமாகக் கொண்டு வேத வேள்விகளாகிய கிரியைகளையே வற்புறுத்தி மீமாஞ்சக நூலை இயற்றியவர் சைமினி முனிவர். வேதம் எல்லாம் விதி, புனைந்துரை, மந்திரம், குறியீடு என நால்வகையுள் அடங்கும். இந்நான்கினுள் விதிவாக்கியங்களே பிரமாணமாகக் கொள்ளப்படும். வேதத்துள் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமே செய்யத்தக்கன. உயிர்களுக்கு வேறாகக் கடவுள் என்பதொரு பொருளில்லை. காணப்படும் உலகமே மெய்ப்பொருள் என்பன மீமாஞ்சை நூலிற் கூறப்படும் பொருள்களாகும். சிவபெருமான் பிட்சாடனராகவும்