பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

'பெரும்பற்றப்புலியூர்த் திருமூலட்டானம்' எனவும், திருவாரூர்த் திருமூலட்டானம் எனவும், இனமுள்ள அடைமொழி கொடுத்து வழங்கப் பெறுவதாயிற்று.

தில்லைப் பெரும்பற்றப்புலியூரில் எல்லாம்வல்ல சிவபெருமான் பதஞ்சலியும் புலிமுனியும் வேண்டிக் கொண்ட வண்ணம் தில்லைப் பொன்னம்பலத்திலே சிவகாமியம்மை கண்டுகளிக்க வானோர்கள் போற்ற ஆனந்தத் திருக்கூத்து ஆடியருள்கின்றார். இத்தெய்வக்காட்சியினை,

கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனை கழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி,
வருமானத் திரள் தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணித்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா னமர்ந்து காண
அமரர்கணம் முடி வணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

என வரும் திருப்பாடலில் திருநாவுக்கரசர் சொல்லோவியஞ் செய்து காட்டியுள்ளார்.

எல்லாம் வல்ல இறைவனைக் கூத்தப்பெருமான் திருவுருவில் வைத்து வழிபடும் முறை எக்காலத்தில் தோன்றியது என்பது இங்குச் சிந்தித்தற்கு உரியதாகும். மொகஞ்சதரோ, அரப்பா என்ற இடங்களில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள சிவலிங்கம் முதலிய தெய்வ உருவங்களின் ஆண்சிலையொன்று இடதுகாலைத் தூக்கி வலதுகாலை யூன்றி நின்று நடம்புரியும் நிலையில் காணப்பெறுகின்றது. இதனைச் சிவபெருமானுக்குரிய திருவுருவங்களில் ஒன்றாகிய நடராசர் - திருவுருவத்தின் பழைய உருவமாகக் கருதுவர் ஆராய்ச்சியாளர். சிவபெருமான் மன்னுயிர்கள் உய்ய வேண்டி உலகங்களையெல்லாம் படைத்தும், காத்தும் ஒடுக்கியும் ஆடவல்ல கூத்தப்பெருமானாகத் திகழ்கின்றான் என்பதும், அம்முதல்வனது ஆடலாலே உலகவுயிர்கள் இயங்குகின்றன என்பதும், அவன் ஆடியருளும் திருக்கூத்தினை அவனுடன் பிரியாதிருந்து கண்டு உயிர்களுக்கு நலஞ்செய்பவள்