பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

அவனிற்பிரியாத திருவருட்சத்தியாகிய உமையம்மையென்பதும், சைவ நூல்களின் துணிபாகும். இவ்வாறு உமையம்மை காண ஆடல்புரியும் இறைவனை முன்னிலையாக்கிப்பரவிப் போற்றுவதாக அமைந்தது 'ஆற்றி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து' எனத் தொடங்கும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்.

முனிவர்களுக்கு அருமறைகளை அருளிச்செய்து பெருகிவரும் கங்கைவெள்ளத்தைத் தன் சடையில் ஏற்று முப்புரத்திலே தீயைச் செலுத்தி வாக்கு மனங்கடந்து நிற்கும் நீலமணிபோலும் மிடற்றினையுடைய இறைவன், தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பலவடிவுகளையும் மீண்டும் தன்னிடத்தே ஒடுக்கிக்கொண்டு உமையம்மையார் சீர் என்னும் தாள முடிவினைத் தர, கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடியருளினான் எனவும், அவன் முப்புரங்களை வென்று அந்த வன்மையினாலே முப்புரத்து அவுணர்கள் வெந்து வீழ்ந்த சாம்பராகிய நீற்றினை அணிந்து கொண்டு பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடியபொழுது பராசக்தியாகிய, அம்மை இடை நிகழும் தூக்கு என்னும் தாளத்தைத் தருவாள் எனவும், கொலைத் தொழிலையுடைய புலியைக் கொன்று அதன் தோலையுடுத்து, கொன்றைப்பூமாலை தோளிலே புரண்டசைய அயனுடைய தலையினை அகங்கையிலே ஏந்திச்சிவபெருமான் காபாலம் என்னும் கூத்தினை ஆடியருளிய பொழுது மலைமகளாகிய உமையம்மையார் தாளத்தின் முதலெடுப்பாகிய பாணியைத் தருவாள் எனவும், இவ்வாறு தாளத்தின் தொடங்கும் காலமாகிய பாணியும் இடை நிகழுங்காலமாகிய தூக்கும் முடியுங்காலமாகிய சீரும் ஆகிய தாளக் கூறு பாட்டை உமாதேவியார் உடனிருந்து காப்ப, எல்லாம் வல்ல இறைவன் மன்னுயிர்கள் உய்திபெற ஆடல்புரிகின்றான் எனவும் மேற்குறித்த கடவுள் வாழ்த்துப் பாடலில் நல்லந்துவனார் என்னும் புலவர் இறைவன் ஆடிய கொடு கொட்டி பாண்டரங்கம் காபாலம் என்னும் மூவகைக் கூத்துக்களையும் முறையே விளக்கிக் கூறியுள்ளார். வாக்கால் கூறப்படாமல் மனத்தால் குறித்த எவ்வகைப் பொருட்கும் எட்டாமல் சொல்லின் வரம்பையும் பொருளின் எல்லையையும் கடந்து நின்ற இறைவன், தன்னை அன்பினால் வழிபடுவோரது உள்ளத்