பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

எனவரும் முதற்பாடல், உலகங்களையெல்லாம் தோற்றுவித்து நிலைபெறச்செய்து பின் தன்னுள் ஒடுக்கிக் கொள்ளும் நிலையில் உயிர்க்குயிராய் எல்லாப் பொருள்களோடும் கலந்து நின்றருளும் இறைவன் சிவகாமியம்மை கண்டு மகிழ ஆனந்தத்திருக்கூத்து ஆடியருளும் உருவத்திருமேனியைப் போற்றும் முறையில் அமைந்ததாகும்.

கற்பனை கடந்த சோதி கருணையே உருவ மாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி”

எனவரும் பாடல் அருமறைச் சிரத்தின் மேலாம் ஞானவெளியிலே கற்பனைக்கெட்டாத சோதிப்பொருளாய்த் திருநடம்புரிந்தருளும் இறைவனது அருவநிலையினைக் குறிப்பதாகும். தில்லைச்சிற்றம்பலத்திலே சிவகாமியம்மை காண ஆடியருளும் நடராசப்பெருமான் திருவுருவம், அம் முதல்வனது உருவத் திருமேனியையும், நடராசர்க்கு அருகே மேற்குப்பக்கத்திலுள்ள திருவம்பலச் சக்கரமாகிய சிதம்பர ரகசியம் இறைவனது அருவத் திருமேனியையும் குறிப்பனவாகும். பொன்னம்பலத்திலே நாள் தோறும் ஆறு காலங்களிலும் திருமஞ்சனப் பூசை கொண்டு அருளுகிற சந்திரமௌளீஸ்வரராகிய படிகலிங்கம் இறைவனது அருவுருவத் திருமேனியையும் குறிப்பதாகும். ஆகவே தில்லைச் சிற்றம்பலத்தே உருவம், அருவம், அருவுருவம் என மூவகைத் திருமேனிகளாக இறைவன் அமர்ந்திருந்து, அன்பர்களது வழி பாட்டினையேற்று அருள் புரிகின்றான் என்பர் பெரியோர். தில்லைவாழந்தணருள் ஒருவரும் சைவசமய சந்தான ஆசாரியருள் நான்காமவரும். ஆகிய உமாபதி சிவாசாரியார் தாமியற்றிய கோயிற் புராணத்தில்,

"ஓங்கும்ஒளி வெளியேநின்று உலகுதொழ நடமாடும்
தேங்கமழும் பொழில்தில்லைத் திருச்சிற்றம் பலம் போற்றி"

எனவும்,