பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

7. பிரமதீர்த்தம்:- இது தில்லைப்பெருங் கோயிலுக்கு வட மேற்கு மூலையில் சிங்காரத் தோப்பு என வழங்கும் திருக்களாஞ்சேரியில் உள்ளது. இக்குளத்தின் மேற்கே வசிட்டமுனிவரால் வழிபாடு செய்யப்பெற்ற திருகளாஞ்செடிவுடையார் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்குப் பிரமபுரீசர் என்னும் திருப்பெயருண்டு. பிரமபுரீசர் சந்நிதியில் இத்தீர்த்தம் அமைந்திருத்தலால் இது பிரமதீர்த்தம் என்னும் பெயர் பெறுவதாயிற்று.

8. சிவப் பிரியை:- இத்தீர்த்தம் தில்லைப் பெருங் கோயிலுக்கு வடதிசையில், தில்லைவன முடையாளாகிய தில்லைக் காளியின் திருக்கோயிலுக்கு முன்னே உள்ளது.

9. திருப்பாற்கடல்:- இத்தீர்த்தம் தில்லைப்பெருங்கோயிலின் வடகிழக்குத் திசையில் அமைந்துள்ளது. வியாக்கிரபாத முனிவருடைய இளங்குழந்தையாகிய உபமன்யு காமதேனுவின் பாலை உண்ணப்பெறாது வருந்தி அழுத நிலையில், தில்லைத் திருமூலட்டானப் பெருமான் உபமன்யு வாகிய குழந்தை உண்டு பசி தீரும்படி திருப்பாற் கடலையே தில்லைக்கு வரவழைத்தருளினான் என்பது புராண வரலாறு. 'பாலுக்குப்பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்' எனத் தில்லை இறைவனைப் போற்றுவர் சேந்தனார். உபமன்யுவின் பொருட்டுத் திருப்பாற்கடல் வந்த பொய்கையாகத் திகழ்வது இத்தீர்த்தமாதலின் இது திருப்பாற்கடல் என வழங்கப் பெறுவதாயிற்று. இத் தீர்த்தத்தினையொட்டி வடகரையில் அமைந்தது திருப்பெருந்துறை என்னும் திருக்கோயிலாகும். சிதம்பரத்தின் கீழ்த்திசையில் பர்ணசாலையில் மாணிக்கவாசகர் சிவயோகம் புரிந்திருக்கும் நிலையில் பாண்டிய நாட்டில் குருவாக எழுந்தருளித் தம்மை ஆண்டு கொண்டருளிய ஆன்மநாதரையும் சிவயோகாம்பிகையையும் திருப்பெருந்துறையில் திருவடி உருவில் வைத்து வழிபாடு செய்தது போலவே, தில்லையிலும் பெருந்துறைப் பெருமானைத் திருவடி உருவில் வைத்து வழிபட்டு மகிழ்ந்தார். இச்செய்தியைப்புலப்படுத்தும் முறையில் தெற்கு நோக்கிய சந்நிதியாக இத்திருப்பெருந்துறைத் திருக் கோயில் அமைந்து