பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

கட்டண விநாயகர் எனப் பெயர் பெற்றாரெனவும் அப்பெயரே பிற்காலத்தில் முக்குறுணி விநாயகர் எனத் திரிந்து வழங்கப் பெற்றதெனவும் கருதுவர் ஆராய்ச்சியாளர்'.

முக்குறுணி விநாயகரைத் தரிசித்தவர்கள் மேலைக் கோபுர வழியாக வெளியே சென்று அக்கோபுரத்தின் தென் பகுதியில் மேற்கு நோக்கிய நிலையில் புடைப்புச் சிற்பமாக அமைக்கப் பெற்றுள்ள கற்பக விநாயகரைத் தரிசித்தல் வழக்கம். தல விநாயகராகிய இப்பிள்ளையார் குலோத்துங்க சோழ விநாயகர் என இக்கோயிற் கல்வெட்டில் குறிக்கப் பெறுகின்றார். இப் பிள்ளையாரை வணங்கிய பின்னர், மேலைக் கோபுரத்தின் வழியாக மீண்டும் உள்ளே வந்து அக்கோபுரத்தின் வடபக்கத்தே கிழக்கு நோக்கிய நிலையில் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ள முருகப்பெருமானை வழிபடுதல் மரபு. இத்திருக்கோயிலில் வள்ளி தெய்வயானை ஆகிய தேவியர் இருவரும் இருபுறத்தே நிற்க முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்துள்ளார். இச்சந்நிதியில் முருகப்பெருமானுக்குத் தம்பியராம் பேறு பெற்ற நவவீரர் வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சந்நிதியில் மயில்கள் இரண்டுள்ளன. அவற்றுள் ஒன்று முருகன் சூரனுடன், போர் செய்யும் நிலையில் மயிலாய் வந்த இந்திரனையும், மற்றொன்று போரின் முடிவில் மயிலாய் வந்த சூரனையும் குறிக்கும்.

இச்சந்நிதியின் நேர் வடக்கே சென்றால் கிழக்கு நோக்கிய நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலும் அதன் அருகே நூற்றுக்கால் மண்டபத்தையொட்டித் தெற்கு நோக்கிய வாயிலையுடைய வீரபாண்டியன் திருமண்டபமும் அமைந்திருத்தலைக் காணலாம். தில்லையில் சிவகங்கைக் கரையின் மேற்கே மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவனால் கட்டப் பெற்றது நூற்றுக்கால் மண்டபமாகும். இது விக்கிரமசோழன் திருப்பண்டபம் என்னும் பெயருடையதென்பது இம்மண்டபத்தின் பன்னிரு தூண்களில் அப்பெயர் பொறிக்கப் பெற்றிருத்தலால் அறியலாம். இம் மண்டபம் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தை நோக்கிய முகப்பு வாயிலையுடையதாய் இரண்டு பக்கங்களிலும் படிகளைப் பெற்றுள்ளது. இத்தகைய நூற்றுக்கால் மண்டபத்தோடு ஒன்றாக இணைக்கப்பெற்றுத் தென்புற முகப்