பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பினையுடையதாய் அமைக்கப்பெற்றதே முற்குறித்த வீர பாண்டியன் திருமண்டபமாகும். இம்மண்டபத்திலுள்ள சில தூண்களில் வீரபாண்டியன் திருமண்டபம் என்னும் பெயர் பொறிக்கப் பெற்றிருத்தலைக் காணலாம். பாண்டிய மன்னர்கள் தங்குல நாயகராகிய சொக்கலிங்கப் பெருமான் மீனாட்சி யம்மை திரு முன்னிலையிலேயே முடி சூடிக்கொள்ளுதல் மரபு. இம்மரபினை யொட்டியே சடையவர்மன் வீரபாண்டியன் என்பான் தான் முடிசூடிக் கொள்ளுதற்கு வாய்ப்பாக இம்மண்டபத்தை யொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலைக்கட்டி அப்பெருமான் முன்னிலையில் கி.பி. 1267-ஆம் ஆண்டில் இம் மண்டபத்தில் வீராபிடேகமும் விஜயாபிடேகமும் செய்து கொண்டான் எனத் தெரிகிறது. வீரபாண்டியன் மண்டபத்துக்குக் கிழக்கே சிவகங்கையை நோக்கிய நிலையில் திரு மூல விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தென் புறத்தில் ஒரு தூணையும் வடபுறத்தில் சுவரையும் உடையதாய் அமைந்துள்ளமையால் இக்கோயில் ஒற்றைக்கால் மண்டபம் என வழங்கப் பெறுகின்றது.

நூற்றுக்கால் மண்டபத்தின் வடபக்கத்தே அமைந்தது சிவகாமியம்மை திருக்கோயிலாகும். சிவகாமக் கோட்டம் என்னும் பெயருடைய இக் கோயில், கி.பி. 1118 முதல் 1136 வரை ஆட்சிபுரிந்த விக்கிரம சோழனால் கற்றளியாக அமைக்கப் பெற்றதாகும் விக்கிரம சோழன் காலத்தில் தொடங்கப்பெற்ற இக்கோயில் திருப்பணி இவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் நிறைவு செய்யப்பெற்றது. கிழக்கு நோக்கிய சந்நிதியாகிய இத்திருக் கோயிலின், முகப்பிலுள்ள சொக்கட்டான் மண்டபம் திருவண்ணாமலை ஆதீனத்தலைவர் ஒருவரால் அமைக்கப் பெற்றதாகும். சிவகாமி அம்மை கோயிலின் முகப்பிலமைந்த கோபுர வாயில், அந்தப்புரப் பெருமாள் திருவாசல் என்னும் பெயருடையதாகும். விக்கிரம சோழன் படைத்தலைவனாகிய மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவன் சிவகாமியம்மை திருக்கோயிலைச் சூழ்ந்த திருச்சுற்றும் திருமாளிகைப்பத்தியும் அமைத்துள்ளான். அந்தப்புரப் பெருமாள் வாசல் வழியே அம்மை கோயிலுட் சென்று வெளிப்பிரகாரத்தை வலம்வரும்