பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அடியார்க்கு அருள் புரிகின்ற தெய்வக் காட்சியைக் காணலாம். இக்கோயில் யானைகளாலும் யாளிகளாலும் இழுக்கப்படும் தேர் வடிவில் அமைக்கப் பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் நாற்புறங்களிலும் உள்ள கீழ்க் குறடுகளில் ஆடல் பாடல் பற்றிய அழகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள தூண்கள் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப் பெற்ற திரிபுவன வீரேச்சுரத்தில் அமைந்துள்ள துாண்களைப் போன்று முழுதும் சிற்ப வேலைப்பாடு நிறைந்தளவாய் விளக்குதலாலும், மூன்றாம் குலோத்துங்கனுக்குரிய பாண்டியார் தம்பிரான் என்னும் சிறப்புப் பெயரமைப்பில் பாண்டிய நாயகம் என்னும் பெயரால் இக்கோயில் வழங்கப் பெற்று வருதலாலும் இத்திருக்கோயில், மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பெற்றிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுள்ளது. தமிழகத்தில் முருகப்பெருமான் கோயில் கொண்ட திருத்தலங்களில் முருகப்பெருமானுக்கென அமைந்த மிகப் பெரிய அழகிய சந்நிதி இப்பாண்டிய நாயகத் திருக்கோயிலேயாகும். இத்திருக்கோயில் மண்டப மேற் கூரையின் உட்புறத்தே கந்தபுராண வரலாறும் முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளும் நம் பன்னிரு திருமுறையாசிரியர்கள் திருவுருவங்களும் எழில் மிக்கவண்ண ஓவியங்களாக வரையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வோவியங்களை வரைந்து இத்திருக்கோயிலுக்கு மூன்று முறை குடமுழுக்குச் செய்தவர்கள் சிதம்பரம் அணிகல வணிகர் தருமபூஷணம் செ. இரத்தினசாமிச் செட்டியார் அவர்களும் அவர்தம் மைந்தர்களும் ஆவர்.

இத்திருக்கோயிலை யொட்டி அமைந்த வடக்குக் கோபுரம் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால் திருப்பணி செய்யப் பெற்றதாகும். இக்கோபுர வாயிலின் உள்ளே கிருஷ்ண தேவராயர் சிலைவடிவம் கிழக்கு நோக்கிய மாடத்தில் உள்ளமை காணலாம். இக்கோபுரத்தின் உட்பக்கத்தே தெற்கு நோக்கிய நிலையில் முருகப்பெருமான் திருவுருவம் கோபுரத்தை யொட்டிய புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது. இச்சந்நிதியில் அறக்கடவுளாகிய இயமன் திருவுருவம் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

பாண்டிய நாயகத்தின் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தின் வடமேற்கு மூலையில் ஒன்பது சிவலிங்கங்கள் எந்தருளிய (sic. எழுந்தருளிய) நவலிங்கம் கோயில் உள்ளது. சுந்தரர் பாடிய திருத் தொண்டத்