பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

தொகையில் திருநீலகண்டக் குயவனார் முதல் திருநீலகண்டப் பாணனார், சடையனார், இசைஞானியார் நம்பியாரூரர்வரையுள்ள அறுபத்து மூன்று தனியடியார்களும், தில்லைவாழந்தணர் முதல் அப்பாலும் அடிச்சார்ந்தார் ஈறாகவுள்ள ஒன்பது தொகை அடியார்களும், இடம் பெற்றுள்ளனர். இவ்வொன்பது தொகையினரையும், சிவலிங்கவடிவில் வைத்துப் போற்றும் நிலையில் அமைந்துள்ளதே இந்த நவலிங்கம் திருக்கோயிலாகும். இக்கோயில் திருத்தொண்டத்தொகையீச்சுரம் என்ற பெயரால் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளது. இக் கோயிலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சிவனடியார் ஒருவர் புதுப்பித்துக் கட்டியுள்ளார்.

நவலிங்கம் திருக்கோயிலுக்கு நேர் கிழக்கே சிவகங்கைத் தீர்த்தத்தின் கீழ்ப்பக்கத்தில் அமைந்துள்ள மண்டபம் ஆயிரக்கால் மண்டபமாகும். முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த மிழலை நாட்டுவேள் கண்டன் மாதவன் என்பான், தில்லையம்பலத்தின் வடகீழ்த்திசையில் சொன்னவாறு அறிவார் (கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாள் நாயனார்) கோயிலும், புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகையும் வரிசையாக அமைத்தான் என்று செய்யுள் வடிவில் அமைந்த கல்வெட்டு ஒன்று கூறுகிறது. கண்டன் மாதவனால் கட்டப் பெற்ற புராண மண்டபத்தை உள்ளடக்கிய நிலையில் விரிந்த இடமுடையதாக அமைக்கப்பெற்றதே இவ்வாயிரக்கால் மண்டபம். இதனைக் கட்டியவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் என ஆராய்ச்சியாளர் சதாசிவபண்டாரத்தார் கருதுவர். அண்மையில், இம்மண்டபத்தைப் பெரும் பொருட் செலவில் பழுது பார்த்துத் திருப்பணி செய்தவர் ஆடூர் பெருநிலக்கிழார் தரும பூஷணம் M. இரத்தினசபாபதி பிள்ளையவர்களாவர். இவ் வாயிரக்கால் மண்டபத்தில்தான் சேக்கிழார் நாயனார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் அரங்கேறியது. தில்லையில் ஆண்டுதோறும் நிகழும் ஆனித்திருமஞ்சன விழாவிலும், மார்கழித் திருவாதிரை விழாவிலும், ஒன்பதாந் திருநாளில் தேரில் எழுந்தருளி நான்கு பெருவீதிகளிலும் உலாப்போந்த நடராசப்பெருமானும் சிவகாமி அம்மையும் அன்றிரவு இம்