பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

மண்டபத்தில் எழுந்தருளியிருந்து மறுநாள் விடியற்காலை திருமஞ்சனம் கொண்டருளி, நண்பகலில் இங்கிருந்து புறப்பட்டு நடம் கொண்ட கூத்தராய் அடியார்களுக்குத் திருவருட் காட்சி நல்கிக் கீழைவாயில் வழியே சிற்றம்பலத்துள் சென்று புகுந்தருள்வர். பத்தாம் திருநாளில் திகழும் இத் திருநடனக் காட்சியே திருக் கூத்துத் தரிசனம் எனச் சிறப்பித்துப் போற்றப்பெறுகின்றது.

சிற்றம்பலத்தில் ஆடல் புரியும் கூத்தப் பெருமானை ஆயிரக்கால் மண்டபத்தே எழுந்தருளச் செய்து மீண்டும் சிற்றம்பலமாகிய ஞான மன்றத்தே புகுந்தருளச்செய்யும் இத்திருவிழா நிகழ்ச்சியானது, மன்னுயிர்களின் நெஞ்சத் தாமரையில் பயிர்த் துடிப்பாக இடைவிடாது நடம்புரிந் தருளும் கூத்தப்பெருமானை நெஞ்சத்தினின்றும் எழுந்தருளச் செய்து, புருவ நடுவில் தியானித்து, ஆறு ஆதாரங்களுக்கும் அப்பாற்பட்டதாய் உச்சந் தலைக்குமேல் பன்னிரண்டு அங்குலம் உயர்ந்து விளங்கும். மேலிடமாகிய ஆயிர இதழ்த் தாமரை மேல் எழுந்தருளும்படி செய்து, முதல்வனது திருவருளோடு ஒன்றியிருந்து, அம் முதல்வனை மறுபடியும் நெற்றிக்கு நேரே புருவத்து இடை வெளியிற் கண்டு போற்றி, மீண்டும் நெஞ்சத்தாமரையில் எழுந்தருளச் செய்யும் சிவஞானச் செல்வர்களது அகப்பூசை முறையினை நினைவுபடுத்துவதாகும். சிவஞானச் செல்வர்களின் அகத்தே நிகழும் இத் திருக்கூத்துத தரிசனத்தை உலகமக்கள் பலரும் புறத்தே கண்டு உய்தி பெறும் நிலையில் நிகழ்த்தப் பெறுவதே நடராசர் தரிசன விழாவாகும். தில்லைச்சிற்றம்பலமாகிய மன்றம் உலக புருடனது நெஞ்சமாகிய ஞான ஆகாயமாகவும், இங்குள்ள ஆயிரக்கால் மண்டபம் மூலாதாரம் முதல் ஆக்ஞை வரையுள்ள ஆறு ஆதாரங்களுக்கும் அப்பாற்பட்டுத் தலையின் மேலிடமாகத் திகழும் (சகஸ்ராரம்) ஆயிரம் இதழ்த் தாமரையாகவும், சிற்றம்பலத்துக்கும் ஆயிரக்கால் மண்டபத்துக்கும் நடுவே குலோத்துங்க சோழன் திருமாளிகை கிழக்கு வாயிலை யொட்டியமைந்த முகமண்டபம் புருவ நடுவாகவும் அமையக், கூத்தப் பெருமான் சிவகாமியம்மை காண ஆயிரக்கால் மண்டபத்திலிருந்து முகமண்டபம் வரையுள்ள எல்லையிலும், முகமண்டபத்திலிருந்து சிற்றம்பலம் வரை