பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

உள்ள எல்லையிலும், திருக்கூத்து நிகழ்த்தியருளும் இத்திரு நடனக் காட்சியானது, சிவஞானச் செல்வர்களால் அகத்திற்கண் கொண்டு பார்த்தற்குரிய திருக்கூத்துத் தரிசனத்தை உலக மக்கள் அனைவரும் முகத்திற்கண் கொண்டு பார்த்து உய்யும் வண்ணம் நிகழ்த்தப் பெறுவதாகும். மூன்றாம் பிரகாரத்தை வலம்வந்தவர்கள் கோயிலினுள்ளே புகுதற்குக் கிழக்கிலும் மேற்கிலும் ஆக இரண்டு வாயில்கள் அமைந்துள்ளன. அவ்விரண்டனுள் மேற்றிசையில் அமைந்துள்ள வாயிலுக்குக் குலோத்துங்க சோழன் திருமாளிகைத் திருவாயில் எனனும் பெயர் கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றது. எனவே இறைவன் திருவுலாப் போகுங் காலத்தில் எழுந்தருளும் கீழைத்திரு வாயிலைக் குலோத்துங்க சோழன் திருமாளிகைக் கீழைத்திருவாயில் எனக் குறிப்பிடுதல் பொருத்தமுடையதாகும். மூன்றாம் பிரகாரத்திலிருந்து கிழக்கு வாயில் வழியாகக் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் நுழைகின்றோம். இப்பிரகாரம் இரண்டாங் குலோத்துங்க சோழனால் அமைக்கப்பெற்றமையின் குலோத்துங்க சோழன் திருமாளிகை எனக் கல்வெட்டிற் குறிக்கப்பெறு கின்றது. இருபத்தொரு படிகளமைந்த கீழை வாசலில் நின்று மேற்கே நோக்கினால் கூத்தப் பெருமான் ஆடல்புரியும் பொன்னம்பலம் எதிரே தோன்றுதல் காணலாம். இரண்டாம் திருச்சுற்றை வலம் வரும் வழியில் தெற்குப் பிராகாரத்திலே தில்லையம்பலவாணர் சந்நிதியில் பலிபீடத்துடன் நிறுவப்பெற்றுள்ள கொடிமரத்தினையும் அதன் தென் பாலமைந்த நிருத்த சபையினையும் கண்டு வழிபடலாம்.

இறைவன் காளியுடன் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாக ஆடல் புரியும் திருமேனி இந்நிருத்த சபையில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைக்கப்பெற்றுள்ளது. இம்மண்டபத்தின் தெற்குப் பக்கத்தே வடக்கு நோக்கிய நிலையில் சரபமூர்த்தியின் சந்நிதி அமைந்துள்ளது. இச்சபை குதிரை பூட்டிய தேரின் அமைப்புடையதாய் அமைக்கப் பெற்றமையின் இது தேர்மண்டபம் எனவும் வழங்கப்பெறும். இம் மண்டபத்திலமைத்துள்ள தூண்கள் திரிபுவன வீரேச்சுரத்திலமைந்துள்ள தூண்கள் போன்று சிற்ப அமைப்புடையனவாய் விளங்குவதாலும், இம்மண்டபத்தின்