பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

வடபக்கம் கீழேயமைந்த குறட்டில் தில்லையம்பலப் பெருமானைக் கைகூப்பித்தொழும் நிலையில் மூன்றாம் குலோத்துங்க சோழனது உருவம் அமைக்கப் பெற்றிருத்தலாலும், அவ்வேந்தனது வழிபடு தெய்வமாகிய சரபமூர்த்தியின் சந்நிதி இங்கு அமைந்திருத்தலாலும் தேர் மண்டபமாகிய இந்நிருத்த சபையைக்கட்டியவன் மூன்றாம் குலோத்துங்க சோழனே என்பதனை நன்கு உணரலாம். இம்மண்டபத்தின் நடுவிலுள்ள. மேற்கூரை தில்லைச் சிற்றம்பலத்தைப் போலவே மரத்தினால் அமைக்கப்பெற்றுச் செம்புத் தகடு வேட்ட பெற்றுள்ளமை காணலாம். இம்மண்டபத்திலுள்ள சிற்பங்கள் யாவும் சிற்பக்கலை வல்லுநர்களால் வியந்து பாராட்டத்தக்க கலை நுட்பமும் வனப்பமுமுடையனவாக விளங்குகின்றன.

நிருத்த சபைக்கு மேற்குத் திசையில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகப் புண்டரீகவல்லித் தாயார் சந்நிதி அமைந்துள்ளது. அதன் வடபுறத்தே அமைந்த மண்டபத் தூணில் தெற்கு நோக்கிய நிலையில் தூணில் பாலதண்டாயுதபாணி சந்நிதி அமைந்துள்ளது. அங்கிருந்து மேலைப்பிரகாரத்தின் வழியே செல்லும் போது குலோத்துங்க சோழன் மேலை வாயிலுக்கு எதிரே கீழ்ப் புறமதிலையொட்டி மேலே திருமுறை கண்ட விநாயகர் சந்நிதி மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. அதன் கீழே தாயுமானேசுவரர் திருவுருவமும் விநாயகர் திருவுருவமும் அமைந்துள்ளன. இப்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சமயாசாரியர் நால்வர் திருவுருவமும், அதனருகில் தென்புறத்தே சந்தானாசாரியர் நால்வர் திருவுருவமும், அதன் தென்புறத்தே வேதாகமத்திருமுறைக் கோயிலும் கிழக்கு நோக்கிய சந்நிதிகளாக அமைக்கப்பெற்றுள்ளன. சமயாசாரியர் நால்வர்க்கு விமானம் அமைத்தும், சந்தானாசாரியர் திருவுருவங்களை விமானம் புதிதாக அமைத்தும், திருமுறைக்கோயிலை விமானத்துடன் அமைத்தும் குடநீராட்டு விழாவைச் சிறப்பாக நிகழ்த்திய பெருமை தருமை யாதீனம் இருபத்தாறாவது குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களுக்குரியதாகும். இச் சந்நிதிகளை வணங்கிக் கிழக்கு நோக்கி வடக்குப் பிரகார வழியே சென்றால் அதன் வட பகுதியில் பெரும்பற்றப்புலியூர்த் திருமூலட்டானம் எனப் போற்றப்பெறும்