பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51




தேறுமொரு பெரு வீடு கட்டி விளையாடும் உமை
சிறுவீடு கட்டி யருளே
சிவகாமசுந்தரி யெனும் பெரிய விமலையே'
சிறுவீடு கட்டி யருளே
.

எனவரும் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடலில் விரித்துக் கூறப்பெற்றிருத்தல் அறியத்தகுவதாகும்.

தில்லைச்சிற்லம்பலமாகிய இத்திருவருள் நிலையத்திலே எல்லாம் வல்ல இறைவன், முக்கண்களும் நான்கு திருக்கரங்களும் உடையவராகவும், இளம்பிறை, பாம்பு, ஊமத்தநறுமலர் கங்கை தங்கிய சடைமகுடம் உடையவராகவும்; புலித்தோலாடை புனைந்தவராகவும்; நீறணிந்த மேனியும் குமிண் சிரிப்புமுடையவராகவும்; தன் இடப்பக்கத்தே உள்ள சிவகாமியம்மையார் கண்டுகளிக்க ஆனந்தத் திருக்கூத்தினையாடியருளும் காட்சி காண்போர்க்கு எக்காலத்தும் பேரின்பத்தினை நல்கும் அற்புதக் காட்சியாகும். இவ்வற்புதக் காட்சியைத் திருநாவுக்கரசு சுவாமிகள் தாம் பாடிய கோயில் திருவிருத்தப் பதிகங்கள் இரண்டிலும் விளித்துரைத்துப் போற்றியுள்ளார். கூத்தப்பெருமானை வழிபடுவோர் இத்திருப்பதிகங்களை இச்சந்நிதியின் முன்னின்று பாடிப் போற்றுவாராயின் அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனார் நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்வர் என்பது திண்ணம். நடராசப் பெருமான் எழுந்தருளியுள்ள சதாசிவபீடத்தையொட்டி நடராசப் பெருமானுக்கு வலப்பக்கத்தேயடைந்த பிரணவ பீடத்தில் சிதம்பர ரகசியம் எனப்படும் அருவத் திருமேனியாகிய சந்நிதி அமைந்துள்ளது. பெருவெளியாக இறைவன் விளங்குந் திறத்தைப் புலப்படுத்தும் இது, வில்வப் பொன்னிதழ் மாலை தொங்கவிடப்பட்டுக் கறுப்புத் திரையினால் மறைக்கப் பெற்றுள்ளது. இதனைத் தரிசிப்போர் தில்லைவாழந்தணர் உள்ளிருந்து திரைவிலக்கி, கற்பூர தீபம் காட்டும் நிலையில் சிற்றம்பலத்தில் அமைந்த பலகணி வாயிலாகவே புறத்தே நின்று கண்டு வழிபடுதல் வேண்டும். நடராசப் பெருமானுக்கு அருகே மாணிக்கக் கூத்தராகிய இரத்தின சபாபதியின் திருவுருவம் அமைந்த பேழையும் படிகலிங்கம் அமைந்துள்ள பேழையும் வைக்கப் பெற்றுள்ளமை காணலாம்.