பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

இத்திருத்தலமேயாகும். தம் பெற்றோர்கள் தில்லைப் பெருமானை வழிபட்டதன் பயனாகப் பிறந்த அப்பைய தீட்சதர் என்பவர் வேதசாத்திரங் கலைகளில் வல்லவராய் வட மொழியிற் பல நூல்களை இயற்றிச்சிவபரத்துவத்தை நிலைநாட்டிய பெருந்தகையார் ஆவர். சிறந்த சைவசமயச் சான்றோராகிய இப் பெரியார் இங்கு நின்று தில்லைக்கூத்தனையும் கோவிந்தராசப் பெருமாளையும் ஒருங்கே போற்றும் முறையில் வடமொழியில் தோத்திரப்பாடல்கள் பாடியுள்ளார். இப்பாடல்கள் திருமாலையும் சிவபெருமானையும் ஒருங்கே போற்றுவனவாகவும் சைவ வைணவ, சமரச உணர்வைத் தூண்டுவனவாகவும் அமைந்துள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிக்கத்தக்கதாகும்.

தில்லைப் பெருங்கோயிலில் தெற்கு மேற்கு வடக்கிலுள்ள கோபுரங்களையடுத்து முறையே திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார ஆசிரியர் மூவர்க்கும் திருக்கோயில்கள் அமைந்திருந்தன. மேற்குக் கோபுரத்தையொட்டி மூன்றாம் பிரகாரத்தில் திருநோக்கழகியான் மண்டபம் ஒன்றிருந்தது. இன்னும்பல சந்நிதிகளும் இருந்தன. இவையனைத்தும் வேற்றுச் சமயத்தார் தில்லைப்பெருங்கோயிலை அரணாகக் கொண்டு தங்கிச் செய்த சிதைவுகளாலும் அரசியல் ஆட்சி மாற்றங்களாலும் கவனிப்பாரில்லாமையாலும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின. முன்னோர்கட்டிய கோயில்களைச் சிதையாமற் பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றல் பிற்காலத்தில் நம்மனோர்க்கு இல்லாமை வருந்துதற்குரியதாகும்.

இறைவன் ஆடல்புரியும் சிற்றம்பலம் சிற்சபை எனவும். அதற்கு முன்னுள்ள எதிரம்பலம் கனகசபை எனவும், கொடிமரத்தின் தெற்கேயள்ள ஊர்த்துவதாண்டவ மூர்த்தியின் சந்நிதி நிருத்தசபை எனவும், சோமாஸ்கந்தர் முதலிய எழுந்தருளும் திருமேனியுள்ள சந்நிதி தேவசபை (பேரம்பலம்) எனவும், ஆயிரக்கால் மண்டபம் இராசசபை எனவும் வழங்கப் பெறும். இவை ஐந்தும் தில்லையிலுள்ள ஐந்து சபைகளாகும்; இவ்வைந்து சபைகளும் சோழ மன்னர்களாலேயே திருப்பணி செய்யப் பெற்றன என்பது இவற்றின் கட்டிட அமைப்பால் நன்குவிளங்கும்.