பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


பொற்பதியாகிய தில்லை, உலகபுருடனின் நெஞ்சத்தாமரை யாகவும் இடைகலை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளும் சந்திக்கும் இடமாகவும் இறைவனது அருட்கூத்து நிகழும் இடமாகவும் திகழ்வதனை,

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும் இமவான் இலங்கைக் குறியுறும்
சாரும் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறும் சுழுனை இவைசிவ பூமியே’’ (2747)

என வரும் திருமந்திரம் இனிது புலப்படுத்துவதாகும்.

தில்லைப் பதியிலே நுண்ணிய ஞான வெளியாகிய திருச்சிற்றம்பலத்திலே இறைவன் நிகழ்த்தியருளும் அற்புதத் திருக் கூத்தினை நேரிற் கண்டு மகிழ்ந்தவர் திருமூலதேவர் என்பது,

 “நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரம னிருந்திடம்
சிற்றம் பலமென்று தேர்ந்து கொண்டேனே” (2770)

எனவரும் திருமந்திரத்தாற் புலனாம். ‘நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி’ என்றது, ஆறாதாரங்களுள் ஆக்ஞை எனப்படும் இடத்தினை. உற்று உற்றுப் பார்த்தல் - ஐம்புல னடக்கி ஒருமைநிலையி லிருந்து கூர்ந்து தியானித்தல். அங்ஙணம் தியானிக்கும் நிலையில் நாதாந்தத்தின் அஞ்செழுத்தாகிய மந்திரவுருவில் ஒளிப்பிழம்பாய் ஆடல்புரியும் இறைவனது திருக்கூத்துப் புலனாகும் என்பார், ‘உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்’ என்றார். உயிர்கள் தமக்குப் பற்றுக்கோடாகக் கொண்டுள்ள எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடாகத் திகழ்பவன் பரமன் ஒருவனே என்று அறிவுறுத்துவார் பற்றுக்குப்பற்றாய்ப் பரமன் இருந்திடம் என்றார். இறைவன் உயிர்களின் உள்ளமாகிய நெஞ்சக்கமலத்திலே நுண்ணிய பரவெளியாகிய ஞான ஆகாசமே இடமாக அருட் கூத்தியற்றுகின்றான் என்பதனைத் தில்லைச்சிற்றம்பலத் திருக்கூத்தினால் தெளிந்து கொண்டேன் என்பார், ‘பரமன் இருந்திடம் சிற்றம்பலமென் றுதேர்ந்து கொண்டேனே என்றார்.