பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

'நற்றவத்தோர் தாம் காண நாதாந்தத் தஞ்செழுத்தாய் உற்றுரு வாய் நின்றாடல்’ (39) எனவும், 'சிவாய நமவென்னும் திரு வெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்’ (31) எனவும் வரும் உண்மை விளக்கத் தொடர்கள் இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தக்கன.

சிதாகாசப்பெருவெளியில் ஆனந்தக் கூத்தராகிய அம்பல வாணர் அருட்சத்தியாகிய சிவகாமி யம்மையுடன் திருவைந் தெழுத்தாகிய மந்திரவுருவாய் நின்று ஆடல் புரியுந்திறத்தைப் புலப்படுத்துவது திருவம்பலச் சக்கரம் என்னும் யந்திரமாகும். தில்லை மன்றில் நிகழும் திருக்கூத்தினைக்கண்டு மகிழ்ந்த திரு மூலநாயனாரை கூத்தப்பெருமானது அருவத்திருமேனியாகிய இதனைத் திருமந்திரம் நாலாந்தந்திரம் திருவம்பலச் சக்கரம் என்ற தலைப்பில் விரித்துரைத்துப் போற்றியுள்ளார்.

நந்தியாகிய சிவபெருமான் திருவைந்தெழுத்தாகிய மந்திர வடிவில் எழுந்தருளியுள்ளான் என்பதனை,

'அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்த பஞ்சாக்கரம்
அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே யமர்ந்திருந் தானே' (திருமந்திரம்-934)

எனவரும் பாடலிற்குறித்த திருமூலர், திருவைந்தெழுத்தே கூத்தப்பெருமான் திருமேனியாக விளங்குந்திறத்தினை

"ஆகின்ற பாதமும் அந்நாவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகரமாம்
ஆகின்ற சியிருதோள், வவ்வாய் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே” (௸941)

எனவரும் திருமந்திரத்தில் விரித்துக் கூறியுள்ளார். “உயிர்களுக்கு ஆக்கமளிக்கும் திருவடியும் அந்த நகர எழுத்தாய் நிலைபெறும் உந்திச்சுழியாகிய வயிற்றிடத்தே மகர எழுத்துப் பொருந்தும். சிகர எழுத்து இருதோள்களாகவும் வகர எழுத்து வாயாகவும் கண்டபின் திருமுடிக்கண் விளங்குகின்றசுடர் யகரவெழுத்தின்