பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

வடிவினதாய்த்தோன்றும்" என்பது இத்திருமந்திரப்பாடலின் பொருளாகும். எல்லாமொழிக்கும் பொதுவாகிய திருவைந்தெழுத்தினைத் தமிழ் எழுத்துவடிவில் மேற்குறித்த வண்ணம் எழுதிப்பார்த்து நடராசப் பெருமானது திருமேனியைத் திருமூலர் முதலிய தமிழ்முனிவர்கள் சிந்தித்துப் போற்றியுள்ளார்கள் என்பது, இங்கு எடுத்துக்காட்டிய திருமந்திரப் பாடலாலும்,

"நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்ச்
சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் எழுந்து நின்ற நேர்மையிற்
செவ்வை யொத்து நின்றதே சிவாயமஞ் செழுத்துமே"

என வரும் சிவவாக்கியர் பாடலாலும்,

"ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியி லேநகரம் -- கூடும்
மகரம் உதரம், வளர்தோள் சிகரம்
பகருமுகம் வா,முடியப் பார்" (உண்மை விளக்கம்-32)


"ஓங்கார மேநற் றிருவாசி யுற்றதனில்
நீங்கா எழுத்தே, நிறைசுடராம்--ஆங்காரம்
அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடலிது
பெற்றார் பிறப்பற்றார் பின்" (௸-34)

என வரும் உண்மை விளக்கச் செய்யுட்களாலும் நன்கு புலனாகும்.

தில்லையம்பலவாணர் நிகழ்த்திய திருக்கூத்தினை ஐந்தொழில் திருக்கூத்து எனவும் பஞ்சகிருத்திய பரமானந்த தாண்டவம் எனவும் கூறுவர் பெரியோர். ஐந்தொழில்களாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன: அவற்றுள் படைத்தல் என்பது ஆணவ இருளில் அகப்பட்டு அறிவு இச்சை செயல்கள் என்னும் ஆற்றல் தளைப்பட்டுத் தனித்துக் கிடந்த ஆன்மாக்களுக்கு அவ்விருள் சிறிதேயகல, அவ்வுயிர்களின் அறிவு இச்சை செயல்கள் புலப்படுதல் வேண்டி இறைவன் தனது உடைமையாகவுள்ள மாயை என்னும் சடசத்தியிலிருந்து. உடல் கருவி உலகு, நுகர். பொருள்களைத் தோற்றுவித்து