பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

“அடுத்தபொன் னம்பலமே சார்வும் அதனுள்
அடுத்த திருநட்ட மதுவே” (சிவ-26)

எனவும்,

"ஆர் துணையா ஆங்கிருப்ப தம்பலவர்" (சிவ--45)

எனவும் சிவபெருமான் திருவந்தாதியில் தில்லைப்பெருமானைப் போற்றியுள்ளார்.

திருவெண்காட்டடிகள்

சிவநெறிச் செல்வர்களால் எத்தகைய அடைமொழியுமின்றிக் கோயில் எனப் போற்றப்பெறும் சிறப்புடையது தில்லைச்சிற்றம்பலம். திருவெண்காட்டடிகள், வெண்பா, கலித்துறை விருத்தம், அகவல் என்னும் நால்வகைப் பாக்களும் ஒன்றன் பின் ஒன்றாக அந்தாதியாகத் தொடுத்து வர நால்வகை மணிகளால் தொடுக்கப்பட்ட மாலை போன்று பாடிய பனுவல் கோயில் நான்மணிமாலை என்பதாகும். பதினோராந் திருமுறையில் அமைந்த இதன் பாடல்கள் யாவும் தில்லைப் பெருமானைப் போற்றிப்பரவும் தோத்திரமாகவும் சைவ சித்தாந்த நுண் பொருள்களைத் தெள்ளிதின் விளக்கும் சாத்திர மாகவும் விளங்குகின்றன.

நம்பியாண்டார் நம்பிகள்

கோயிலாகிய தில்லைச் சிற்றம்பலத்திலே அருட்கூத்தியற்றும் அம்பலவாணரைப் பண்ணார்ந்த விருத்தமாகிய கட்டளைக் கலித்துறையால் நம்பியாண்டார் நம்பி பரவிப் போற்றிய செந்தமிழ்ப்பனுவல் கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்பதாகும். பண்ணோடியன்ற பாடல் என்ற பொருளுடையது 'பண்ணியல் விருத்தம்' என்றதொடர். லகரத்திற்கு ரகரம் போலியாய்ப் பண்ணியர் விருத்தம் என்றாயிற்று: இனி, 'கோயில் திருப்பண்ணியர்' என்ற தொடர்க்குத் 'தில்லைப் பெருங்கோயிலில் திருத்தகவினதாகிய அருட்கூத்தினை நிகழ்த்தி யருளுபவர்' எனப் பொருள் கொண்டு கூத்தப் பெருமானைப் பரவிய விருத்தம் எனப் பொருளுரைத்தற்கும் இடமுண்டு. திரு