பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

நாரையூரில் ஆதிசைவக் குடும்பத்தில் தோன்றிய பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் அபய குலசேகர சோழ மன்னன் வேண்டிய வண்ணம் தில்லையில் தேவாரத்திருமுறைகள் இருக்குமிடத்தைத் தெரிவித்து, திருமுறைகளை முன்போல வருத்தருளினார். திருத்தொண்டர் திருவந்தாதி பாடியதுடன் சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெற்ற அடியார் வரலாறுகளை வகுத்துரைக்கும் முறையில் திருக்கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தால் கூத்தப் பெருமானைப் பரவிப் போற்றினார் என்பது திருமுறை கண்ட வரலாறாகும்.

சேக்கிழார் நாயனார்

அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் பெருமான் அநபாய சோழன் விரும்பியவண்ணம் தில்லைப்பதியையடைந்து பொன்னம்பலவாணரை வழிபட்டு 'உலகெலாம்' என அம்பலவர் - அருளிய மெய்ம் மொழியை முதலாகக்கொண்டு,

உலகெலா முணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்'
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

என அம்பலவாணரை வாழ்த்தி வணங்கித் திருத்தொண்டர் புராணமாகிய வரலாற்றுக் காப்பியத்தினைத் தில்லைப்பதியில் தங்கிப்பாடி முடித்தருளினார். இவ்வரலாற்றை உமாபதிசிவம் தாம் இயற்றிய சேக்கிழார் நாயனார் புராணத்தில் விரித்துக் கூறியுள்ளமை இங்கு உணர்தற்குரியதாகும்.

‘பத்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவிவல்லவராகிய சேக்கிழார் நாயனார் தில்லைவாழந்தணர் புராணத் தொடக்கத்தில்,

"ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகிச்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப்
போதியா நிற்குந்தில்லைப் பொதுநடம் போற்றிபோற்றி"