பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

எண்ணி ஏக்கத்துடன் புறத்தே துயில்கொண்டார். அவர்தம் ஏக்கத்தைப்போக்க எண்ணிய கூத்தப்பெருமான் அவரது கனவில் தோன்றி 'நீ எண்ணியவாறு இப்பிறவி போய் நீங்க வேள்வித்தீயில் மூழ்கி முப்புரி நூல் மார்பராகிய தில்லைவாழந் தணர்களுடன் என்னை அணைவாயாக’ என அருள்புரிந்து தில்லைவாழந்தணர் கனவிலும் தோன்றி வேள்வித்தீயமைக்கும்படி பணித்து மறைந்தருளினார். இப்பொழுது சிதம்பரத்தின் தென்திசையிலே ஓமக்குளம் என வழங்கும் இடத்தில் தில்லை வாழந்தணரும் வேள்வித்தீயமைத்தனர், நந்தனார் அதன்கண் மூழ்கிப் புண்ணிய முனிவராய்ச் சடை முடிதாங்கித் தோன்றினார். தில்லைவாழந்தணர்கள் மறை முனிவராகிய நந்தனாரை வணங்கி அவரைத் தில்லைச்சிற்றம்பலவர் திருமுன் அழைத்துச் சென்றனர். அந்நிலையில் நந்தனார் உலகுய்ய நடமாடும் எல்லையாகிய சிதாகாசப்பெருவெளியிற் கலந்து பேரின்பப் பெருவாழ்வு பெற்றார். அம்பலவர் திருவடியில் கலந்து மறைந்த நந்தனாரை யாவரும் கண்டிலர். தில்லை வாழந்தணர் அதிசயித்தனர். அந்தமிலா ஆனந்தப் பெருங்கூத்தர் தம்திருவடிகளைத் தொழுது இன்புற்றிருக்கும் வண்ணம் நந்தனார்க்குப் பேரருள் புரிந்தார்.

கூற்றுவநாயனார்

இவர் களந்தை (களப்பாள்) என்னும் ஊரிலே குறுநிலமன்னர் குடியிலே தோன்றியவர். பகைவர்களைப் போரில் வென்று சிவபெருமான் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தினை நாளும் ஓதிச் சிவனடியார்களைப் பணிந்து திருத்தொண்டு புரியும் கூற்றுவராகிய இவர், திருவருளாற்றலால் அரசர் பலரையும் வென்று வாகை சூடினார். முடிவேந்தர்க்குரிய முடியொன்றும் நீங்கலாக எல்லாச் செல்வங்களும் எய்தப் பெற்ற இவர். தில்லைவாழந்தணரை யடைந்து தமக்கு முடிசூட்டும்படி வேண்டினார். 'சோழ மன்னர்க்கன்றி நாங்கள் முடிசூட்ட மாட்டோம் எனக் கூறிய அந்தணர்கள், தங்களுள் ஒருகுடும்பத்தாரை முடியைக்காத்துக் கொள்ளும்படி இருக்கச்செய்து சேர நாட்டை - அடைந்தார்கள். அந்நிலையிற் கூற்றுவனார் தில்லையம்பலப் பெருமானை மனங்கொண்டு 'அடியேன் நின்திருவடிப் போதினை முடியாகப் பெற வேண்டும்' என்று பரவித்துயில்