பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு “என்கோச் செங்கண்ணானோ" என அருமை தோன்றப் பரிவுடன் கூறி உயிர் துறந்தாள். சுபதேவன் குழந்தையை வளர்த்து முடிசூட்டினான். கோச்செங்கட் சோழர் சிவபெருமானது திருவருளாலே தம் முன்னைப் பிறப்பின் உணர்வோடு திருவானைக்காவற் பெருமானுக்குப் பெருந்திருக் கோயிலமைத்து வழிபட்டார். சோழநாட்டின் அக நாடுகள் தோறும் சிவபெருமானுக்கு மாடக்கோயில் கட்டினார். இவர் சிவபிரானுக்குக் கட்டிய மாடக்கோயில்கள் எழுபது எனவும் இவரே திருமாலுக்குத் திருநறையூரில் மணிமாடம் என்ற திருக்கோயிலைக் கட்டினார் எனவும் திருமங்கையாழ்வார் கூறிப் பாராட்டியுள்ளார்.

கோச்செங்கட்சோழர் திருச்சிற்றம்பலப் பெருமானை வணங்கித் தில்லைவாழந் தணர்கட்குத் தங்கும் மனைகளைக் கட்டிக் கொடுத்தார். அரசியலாட்சியினை இனிது நிகழ்த்தி முடிவில் தில்லையம்பலப் பெருமான் திருவடியினையடைந்து' பேரின்ப முற்றார்.

முதல் வரகுணபாண்டியன்

‘கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராஜன்’ எனப் போற்றப்பெறும் முதல் வரகுண பாண்டியன், சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் தன் ஆட்சிக்குட் படுத்திய பெருவேந்தனாவான். இவன் மாணிக்கவாசகர் காலத்தில் வாழ்ந்த பாண்டியன். இவ்வேந்தர் பெருமானை மானிக்கவாசகர் தாம்பாடிய திருச்சிற்றம்பலக் கோவையில் வரகுணனாம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் (திருக்கோவையார்-306) எனவும், 'சிற்றம்பலம் புகழும் மயலோங் கிருங்களி யானை வரகுணன' (திருக்கோவையார்-327) எனவும் வரும் தொடர்களில் தில்லையம்பலப் பெருமான் பால் இவன் கொண்டிருந்த பேரன்பினைப் பாராட்டிப் போற்றியுள்ளார். பெரிய அன்பின் வரகுண தேவராகிய இவ்வேந்தர் பெருமான் திருவிடை மருதூரில் தங்கிச் செய்த அன்பின் வழிப்பட்ட செயல்களைப் பட்டினத்தடிகள் தாம்பாடிய திருவிடைமருதூர் மும்மணிக்